2 நாளாகமம் 33 : 1 (ECTA)
யூதாவின் அரசன் மனாசே
(2 அர 21:1-9) மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு; அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 நாளாகமம் 33 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவரால் துரத்தியடிக்கப்பட்ட நாடுகளின் அருவருக்கத்தக்க செயல்களைப் பின்பற்றி, அவனும் ஆண்டவரின் பார்வையில் தீமையானதையே செய்தான். [* எரே 15: 4 ]
2 நாளாகமம் 33 : 3 (ECTA)
ஏனெனில், அவன் தன் தந்தை எசேக்கியா உடைத்தெறிந்த பலிபீடங்களை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகால்களுக்குப் பலிபீடங்களையும், அசேராக் கம்பங்களையும் நிறுவி, வான்படைகளைப் பணிந்து தொழுதான்.
2 நாளாகமம் 33 : 4 (ECTA)
“எனது பெயர் எருசலேமில் என்றென்றும் விளங்கும்” என்று சொன்ன ஆண்டவரின் இல்லத்தில் அவன் பலிபீடங்களை எழுப்பினான். [* 2 குறி 6: 6 ]
2 நாளாகமம் 33 : 5 (ECTA)
ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.
2 நாளாகமம் 33 : 6 (ECTA)
பென்இன்னோம் பள்ளத்தாக்கில் அவன் தன் புதல்வரை நெருப்பில் சுட்டெரித்துப் பலியாக்கினான்; சகுனம் பார்த்து, குறிகேட்டு, பில்லி சூனியங்களைக் கடைப்பிடித்து, மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் புகலிடமளித்து, ஆண்டவரின் திருமுன் மிகவும் தீமையானதைச் செய்து அவருக்குச் சினத்தை உண்டாக்கினான்.
2 நாளாகமம் 33 : 7 (ECTA)
கடவுள் தாவீதிடமும் அவர் மகன் சாலமோனிடமும், “இஸ்ரயேலின் குலங்களில் நான் தேர்ந்தெடுத்துள்ள எருசலேமில் இருக்கும் இந்தக் கோவிலில் எனது பெயரை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்” என்றும், * 1 அர 9:3-5; 2 குறி 7:12-18..
2 நாளாகமம் 33 : 8 (ECTA)
“மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இஸ்ரயேலர் சரியாய்க் கடைப்பிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்; அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான். * 1 அர 9:3-5; 2 குறி 7:12-18..
2 நாளாகமம் 33 : 9 (ECTA)
இஸ்ரயேல் மக்களின் முன்பாக ஆண்டவர் அழித்த நாடுகள் செய்த தீமைகளைவிட யூதாவும், எருசலேம் வாழ் மக்களும் மிகுந்த தீமை செய்யவும் நெறி தவறவும் மனாசே காரணமாயிருந்தான்.
2 நாளாகமம் 33 : 10 (ECTA)
மனாசேயின் மனமாற்றம் ஆண்டவர் மனாசேயுடனும் மக்களுடனும் பேசிய போதிலும், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.
2 நாளாகமம் 33 : 11 (ECTA)
ஆதலால், ஆண்டவர் அசீரிய மன்னனின் படைத்தலைவர்களை அவர்களுக்கு எதிராக வரச் செய்தார்; அவர்கள் மனாசேயைச் சிறைப்பிடித்து, கொக்கிகள் இட்டு, வெண்கலச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு இழுத்துச் சென்றனர்.
2 நாளாகமம் 33 : 12 (ECTA)
அங்கே அவன் துன்புறுத்தப்பட்டபோது தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி மன்றாடி, தன் மூதாதையரின் கடவுள் முன் மிகுந்த வருத்தமுடன் தன்னையே தாழ்த்தினான்.
2 நாளாகமம் 33 : 13 (ECTA)
ஆண்டவர், அவன் மீண்டும் தம்மைக் கெஞ்சி மன்றாடியதால், அவனது வேண்டுதலைக் கேட்டார்; அதனால் எருசலேமுக்கும் நாட்டுக்கும் அவன் திரும்பி வருமாறு செய்தார். இதனால், ஆண்டவரே கடவுள் என்று மனாசே அறிந்து கொண்டான்.
2 நாளாகமம் 33 : 14 (ECTA)
இதன்பின்னர், தாவீதின் நகரில் கீகோன் பள்ளத்தாக்கின் மேற்புறம் தொடங்கி, மீன்வாயிலின் தொடக்கம் வரையிலும், வெளிப்புற மதிலை அவன் எழுப்பினான். இம்மதில் ஓபேலைச் சுற்றிலும்உயர்ந்திருக்கச் செய்தான். யூதாவிலுள்ள அரண்சூழ் நகர்களில் எல்லாம் படைத்தலைவர்களை நியமித்தான்.
2 நாளாகமம் 33 : 15 (ECTA)
மேலும், வேற்றுத் தெய்வங்களையும் சிலைகளையும் ஆண்டவர் இல்லத்திலிருந்து அகற்றினான்; ஆண்டவரின் இல்ல மலையிலும், எருசலேமிலும் தான் கட்டிய பலிபீடங்களைத் தகர்த்து, அவற்றை நகருக்கு வெளியே வீசியெறிந்தான்.
2 நாளாகமம் 33 : 16 (ECTA)
அவன் ஆண்டவரின் பலிபீடத்தை மீண்டும் கட்டி, அதனில் நல்லுறவுப் பலியையும் நன்றிப் பலியையும் செலுத்தினான்; இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரை வழிபடுமாறு யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 33 : 17 (ECTA)
ஆயினும், மக்கள் தொழுகை மேடுகளிலேயே — தங்கள் கடவுளாம் ஆண்டவருக்காக மட்டும் — பலியிட்டு வந்தனர்.
2 நாளாகமம் 33 : 18 (ECTA)
மனாசேயின் இறப்பு
(2 அர 21:17-18) மனாசேயின் பிற செயல்களும், அவன் கடவுளுக்கு எழுப்பிய வேண்டுதலும், இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவர் பெயரால் திருக்காட்சியாளர் உரைத்த வாக்குகள் ஆகிய யாவும் இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
2 நாளாகமம் 33 : 19 (ECTA)
அவனது மன்றாட்டு, அதற்கு ஆண்டவர் செவிகொடுத்த பாங்கு, அவன் பாவங்கள், பற்றுறுதியற்ற தன்மை ஆகியவை பற்றியும், அவன் தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் நிறுவிய இடங்கள் பற்றியும் ஓசாய் என்பவரது குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
2 நாளாகமம் 33 : 20 (ECTA)
மனாசே தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தன் அரண்மனையிலேயே அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆமோன் அரசனானான்.
2 நாளாகமம் 33 : 21 (ECTA)
யூதாவின் அரசன் ஆமோன்
(2 அர 21:19-26) ஆமோன் ஆட்சியேற்றபோது, அவனுக்கு வயது இருபத்திரண்டு; அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்தான்.
2 நாளாகமம் 33 : 22 (ECTA)
அவன், தன் தந்தை மனாசேயைப் போல் ஆண்டவர் திருமுன் தீமையானதையே செய்தான்; தன் தந்தையால் வார்க்கப்பட்ட சிலைகளுக்கு ஆமோன் பலி நிறைவேற்றி வழிபாடு செய்து வந்தான்.
2 நாளாகமம் 33 : 23 (ECTA)
ஆயினும், அவன் தந்தை போலன்றி, ஆண்டவர் திருமுன் தன்னையே தாழ்த்திக் கொள்ளாமல் தன் குற்றத்தை வளர்த்துக் கொண்டான்.
2 நாளாகமம் 33 : 24 (ECTA)
அவன் அலுவலர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து, அவனது அரண்மனையிலேயே அவனைக் கொலை செய்தனர்.
2 நாளாகமம் 33 : 25 (ECTA)
ஆனால், நாட்டுமக்கள் அரசன் ஆமோனுக்கு எதிராகச் சதிசெய்தவர் எல்லாரையும் கொன்றுவிட்டு, அவன் மகன் யோசியாவை அவனுக்குப்பதில் அரசனாக்கினர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25