2 நாளாகமம் 26 : 1 (ECTA)
யூதாவின் அரசன் உசியா
(2 அர 14:21-22; 15:1-7)
பின்னர், யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுடைய* உசியாவை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர். * ‘அசரியா’ என்பது மறுபெயர்..
2 நாளாகமம் 26 : 2 (ECTA)
அரசன் தன் மூதாதையருடன் துயில் கொண்டபின், ஏலோத்தைக் கட்டியெழுப்பி, அதனை யூதாவுக்குச் சொந்தமாக்கினவன் இவனே.
2 நாளாகமம் 26 : 3 (ECTA)
உசியா அரியணை ஏறியபோது, அவனுக்கு வயது பதினாறு. எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேமைச் சேர்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.
2 நாளாகமம் 26 : 4 (ECTA)
அவன் தன் தந்தை அமட்சியாவைப் போலவே ஆண்டவரின் பார்வையில் யாவற்றிலும் நேர்மையாக நடந்து கொண்டான்.
2 நாளாகமம் 26 : 5 (ECTA)
இறையச்சத்தில் தன்னைப் பயிற்றுவித்த செக்கரியாவின் வாழ்நாள் முழுவதும், உசியா கடவுளையே நாடினான். அவன் ஆண்டவரைத் தேடிய காலமெல்லாம் கடவுள் அவனுக்கு வெற்றியை அளித்தார்.
2 நாளாகமம் 26 : 6 (ECTA)
பின்பு, பெலிஸ்தியருடன் போரிட்டு, காத்து, யாப்னே, அஸ்தோது ஆகியவற்றின் மதில்களைத் தகர்த்தெறிந்தான்; அஸ்தோதைச் சுற்றிலும் பெலிஸ்திய நாட்டிலும் நகர்களை எழுப்பினான்.
2 நாளாகமம் 26 : 7 (ECTA)
பெலிஸ்தியரையும், கூர்ப்பாகாவில் குடியிருந்த அரேபியரையும், மெயோனியரையும் வெல்லக் கடவுள் அவனுக்குத் துணைபுரிந்தார்.
2 நாளாகமம் 26 : 8 (ECTA)
அம்மோனியர் உசியாவுக்குக் கப்பம் கட்டினர்; அவன் ஆற்றல் மிக்கவனாய் விளங்கியதால், அவனது புகழ் எகிப்தின் எல்லைமட்டும் பரவியது.
2 நாளாகமம் 26 : 9 (ECTA)
உசியா எருசலேமில் மூலை வாயில் மேலும், பள்ளத்தாக்கு வாயில் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் கொத்தளங்களை எழுப்பி அவற்றை வலுப்படுத்தினான்.
2 நாளாகமம் 26 : 10 (ECTA)
அவன் பாலைநிலத்திலும் கொத்தளங்களைக் கட்டி, பல கிணறுகளையும் வெட்டினான். அவனுக்கு பள்ளத்தாக்கிலும் சமவெளியிலும் ஏராளமான ஆடுமாடுகள் இருந்தன; மலைப் பகுதியிலும் வயல்வெளிகளிலும் அவனுக்கு வேளாண்மை செய்வோரும், திராட்சை பயிரிடுவோரும் இருந்தனர். ஏனெனில், அவன் பயிரிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.
2 நாளாகமம் 26 : 11 (ECTA)
உசியாவுக்குப் போர்த் திறனுடைய படை ஒன்று இருந்தது. அது எழுத்தர் எயீயேல், அலுவலர் மகசேயா ஆகியோரால் வகுக்கப்பட்டு, அரச அலுவலர் தலைவர்களில் ஒருவரான அனானியாவின் தலைமையில் போருக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது.
2 நாளாகமம் 26 : 12 (ECTA)
இப்போர்வீரர்களின் குடும்பத் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு பேர்.
2 நாளாகமம் 26 : 13 (ECTA)
அவர்களின் பொறுப்பில் மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு வீரர் கொண்ட ஆற்றல்மிகு படை இருந்தது. அது எதிரியோடு மிகுந்த வலிமையுடன் போரிடுவதில் அரசனுக்குத் துணைநின்றது.
2 நாளாகமம் 26 : 14 (ECTA)
உசியா தன் படையினர் அனைவருக்கும் கேடயம், வேல், தலைச்சீரா, மார்க் கவசம், வில், கவண் கற்கள் ஆகியவற்றைச் செய்தான்.
2 நாளாகமம் 26 : 15 (ECTA)
அம்பு எய்வதற்கும், பெரிய கற்களை வீசுவதற்கும் திறமை மிக்கோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளை எருசலேமில் செய்து கொத்தளங்கள் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் அவற்றை நிறுவினான். அவன் வியத்தகு முறையில் கடவுளிடமிருந்து உதவி பெற்று, வலிமை அடைந்ததால் அவன் புகழ் வெகுதூரம் பரவியது.
2 நாளாகமம் 26 : 16 (ECTA)
உசியாவின் ஆணவமும் தண்டனையும் உசியா வலிமைமிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான். தன் கடவுளாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், தூபபீடத்தின்மேல் தானே தூபம் காட்ட ஆண்டவரின் இல்லத்தில் நுழைந்தான்.
2 நாளாகமம் 26 : 17 (ECTA)
ஆனால், குரு அசரியாவும் அவருடன் ஆண்டவரின் எண்பது வலிமைமிகு குருக்களும் தொடர்ந்து சென்றனர்.
2 நாளாகமம் 26 : 18 (ECTA)
அவர்கள் அரசன் உசியாவைத் தடுத்து நிறுத்தி, அவனிடம், “ஓ உசியா! ஆண்டவருக்குத் தூபம் காட்டுவது உமது வேலையன்று; தூபம் காட்டுவதற்கெனத் திருநிலைப்படுத்தப்பட்டவரும், ஆரோனின் புதல்வருமான குருக்களுக்கே உரிய பணி அது! ஆதலால், திருத்தலத்தைவிட்டு வெளியே செல்லும்! நீர் செய்வது தவறு! நீர் கடவுளாகிய ஆண்டவரால் மேன்மை பெறமாட்டீர்” என்றனர். [* விப 30:7-8; எண் 3: 10 ]
2 நாளாகமம் 26 : 19 (ECTA)
அப்பொழுது உசியா சினமுற்றான்; இவ்வாறு அவன், தூப கலசத்தைக் கையில் பிடித்துக்கொண்டே, குருக்கள் மேல் கோபமுற்றபோது, அவர்களுக்கு முன்பாக, ஆண்டவரின் இல்லத்தில் தூபபீடத்திற்கு அருகில், அவன் நெற்றியில் தொழுநோய் கண்டது.
2 நாளாகமம் 26 : 20 (ECTA)
தலைமைக் குருவான அசரியாவும் மற்ற எல்லாக் குருக்களும் அவன் நெற்றியில் தொழுநோய் பற்றியிருந்ததைக் கண்டனர். உடனே அவர்கள் அவனை அங்கிருந்து வெளியேற்ற முனைந்தனர்.உசியாவும், ஆண்டவர் தன்னைத் தண்டித்ததால், உடனே வெளியேறினான்.
2 நாளாகமம் 26 : 21 (ECTA)
உசியாவின் இறப்பு அரசன் உசியா இறக்கும்வரை ஒரு தொழுநோயாளியாகவே இருந்தான். ஆண்டவரின் இல்லத்திலிருந்து அவன் விலக்கிவைக்கப்பட்டிருந்ததால், ஒரு தொழுநோயாளியாகத் தன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அவன் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி வந்தான்.
2 நாளாகமம் 26 : 22 (ECTA)
உசியாவின் பிற செயல்களை, தொடக்கமுதல் இறுதிவரை, ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா எழுதிவைத்துள்ளார்.
2 நாளாகமம் 26 : 23 (ECTA)
உசியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். உசியா ஒரு தொழுநோயாளி என்பதால், அவன் மூதாதையரின் அருகில் அரசர்களுக்குரிய கல்லறை நிலம் ஒன்றில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பிறகு அவன் மகன் யோத்தாம் அரசன் ஆனான். [* எசா 6: 1 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23