2 நாளாகமம் 18 : 1 (ECTA)
பொய் வாக்கினர்
(1 அர 22:1-28)
யோசபாத்து மிகுந்த செல்வமும் புகழும் பெற்றிருந்தார்; திருமணத்தின் வழியாக ஆகாபுடன் உறவுமுறை கொண்டார்.
2 நாளாகமம் 18 : 2 (ECTA)
சில ஆண்டுகளுக்குப்பின், ஆகாபைச் சந்திக்க அவர் சமாரியா சென்றார். மிகுதியான ஆடுமாடுகளை அடித்து அவருக்கும் அவர் ஆள்களுக்கும் விருந்தளித்த ஆகாபு இராமோத்து-கிலயாதிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு அவரைத் தூண்டினான்.
2 நாளாகமம் 18 : 3 (ECTA)
இஸ்ரயேலின் அரசனான ஆகாபு யூதாவின் அரசன் யோசபாத்தை நோக்கி, “இராமோத்து-கிலயாதை எதிர்க்க என்னோடு வருவீரா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத்து அவனிடம் “உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; நான் உமக்குத் துணையாகப் போருக்கு வருவேன்” என்றார்.
2 நாளாகமம் 18 : 4 (ECTA)
யோசபாத்து இஸ்ரயேல் அரசனை நோக்கி, “ஆண்டவரின் வாக்கு எதுவென இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்” என்றார்.
2 நாளாகமம் 18 : 5 (ECTA)
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் நானூறு பொய்வாக்கினரை வரவழைத்தான். “நாங்கள் இராமோத்து கிலயாதிற்கு எதிராகப் படையெடுக்கலாமா, வேண்டாமா?” என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், “போங்கள்; ஏனெனில், அரசன் கையில் கடவுள் அதை ஒப்படைப்பார்” என்று பதிலளித்தனர்.
2 நாளாகமம் 18 : 6 (ECTA)
ஆனால் யோசபாத்து, “நாம் கேட்டறிவதற்கு இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர் யாருமில்லையா?” என்று கேட்க,
2 நாளாகமம் 18 : 7 (ECTA)
அதற்கு ஆகாபு, “ஆண்டவரின் வாக்கைக் கேட்டறிவதற்கு இம்லாவின் மகன் மீக்காயா என்பவன் இருக்கிறான். ஆனால், நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில், எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாவே எப்பொழுதும் இறைவாக்கு உரைக்கிறான்” என்றான். அதற்கு யோசபாத்து, “அரசே நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்” என்றார்.
2 நாளாகமம் 18 : 8 (ECTA)
உடனே இஸ்ரயேலின் அரசன் ஓர் அலுவலரிடம், “இம்லாவின் மகன் மீக்காயாவை உடனே அழைத்து வா” என்றான்.
2 நாளாகமம் 18 : 9 (ECTA)
பிறகு, இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசர் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய்ச் சமாரியா நுழைவாயில் மண்டபத்தில் தம் அரியணையில் அமர்ந்தனர். அவர்கள் முன் பொய்வாக்கினர் அனைவரும் வாக்கு உரைத்துக் கொண்டு இருந்தனர்.
2 நாளாகமம் 18 : 10 (ECTA)
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “‘இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அழித்துவிடுவீர்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றான்.
2 நாளாகமம் 18 : 11 (ECTA)
பொய்வாக்கினர் அனைவரும் அவ்வாறே வாக்கு உரைத்து, “நீர் இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார்” என்றனர்.
2 நாளாகமம் 18 : 12 (ECTA)
மீக்காயாவை அழைக்கப்போன தூதன் அவரை நோக்கி, “இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்ப்பட அரசருக்கு உகந்ததாகவே வாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கும் அவர்களது வாக்கைப்போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்” என்றான்.
2 நாளாகமம் 18 : 13 (ECTA)
அதற்கு மீக்காயா, “ஆண்டவர் மேல் ஆணை! என் கடவுள் எனக்குச் சொல்வதையே நான் உரைப்பேன்” என்றார்.
2 நாளாகமம் 18 : 14 (ECTA)
அவர் அரசனிடம் வந்தபோது அவன் அவரிடம், “மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின் மீது போர் தொடுக்கலாமா? வேண்டாமா?” என்று கேட்டன். அதற்கு அவர், “போங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்” என்றார்.
2 நாளாகமம் 18 : 15 (ECTA)
அரசன் அவரிடம், “ஆண்டவர் திருப்பெயரால் உண்மையைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்லலாகாது என்று உன்னை எத்தனை முறை ஆணையிடவைப்பது?” என்றான்.
2 நாளாகமம் 18 : 16 (ECTA)
அப்பொழுது மீக்காயா, “இஸ்ரயேலர் யாவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை; அவரவர்தம் வீட்டிற்கு அமைதியாகத் திரும்பிப் போகட்டும்’ என்றார்” என்று கூறினார். * எண் 27:17; எசே 34:5; மத் 9:36; மாற் 6:34..
2 நாளாகமம் 18 : 17 (ECTA)
அதைக் கேட்ட இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, “இவன் எனக்குச் சாதகமாக அன்று, பாதகமாகவே இறைவாக்கு உரைப்பான் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
2 நாளாகமம் 18 : 18 (ECTA)
அப்பொழுது மீக்காயா, “ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் தம் அரியணைமேல் வீற்றிருப்பதையும் விண்ணகப்படையெல்லாம் அவர்தம் வலப்புறமும் இடப்புறமும் நிற்பதையும் கண்டேன்.
2 நாளாகமம் 18 : 19 (ECTA)
அந்நேரத்தில் ஆண்டவர், ‘இஸ்ரயேலின் அரசனான ஆகாபு இராமோத்து-கிலயாதிற்குச் சென்று அங்கே வீழ்ச்சியடையும்படி அவனை வஞ்சிக்கப்போகிறவன் யார்?’ என்று கேட்க, அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, மற்றொருவன் வேறொன்றைச் சொன்னான்.
2 நாளாகமம் 18 : 20 (ECTA)
அப்பொழுது ஒர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, ‘நானே போய் அவனை வஞ்சிப்பேன்’ என்றது. ‘எவ்வாறு?’ என்று ஆண்டவர் அதைக் கேட்டார்.
2 நாளாகமம் 18 : 21 (ECTA)
அந்த ஆவி, ‘நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்கு ஆண்டவர் ‘நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்’ என்றார்.
2 நாளாகமம் 18 : 22 (ECTA)
எனவே, இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார்” என்றார்.
2 நாளாகமம் 18 : 23 (ECTA)
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து, “ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்று உன்னிடம் பேசிற்று என்று சொல்” என்றான்.
2 நாளாகமம் 18 : 24 (ECTA)
அதற்கு மீக்காயா, “நீ உள்ளறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளில் தெரிந்து கொள்வாய்” என்றார்.
2 நாளாகமம் 18 : 25 (ECTA)
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் இவ்வாறு கட்டளையிட்டான்: “மீக்காயாவைப் பிடித்து, அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும், அரசன் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
2 நாளாகமம் 18 : 26 (ECTA)
அவர்களிடம் ‘நலமாய் நான் திரும்பும்வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள்; இவனுக்குச் சிறிதளவே அப்பமும் தண்ணீரும் கொடுத்து வாருங்கள்’ என்று கூறுங்கள்”
2 நாளாகமம் 18 : 27 (ECTA)
அதற்கு மீக்காயா, “நலமாய் நீ திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே, இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
2 நாளாகமம் 18 : 28 (ECTA)
ஆகாபின் அழிவு
(1 அர 22:29-35)
பின்னர், இஸ்ரயேலின் அரசனும் யூதாவின் அரசர் யோசபாத்தும் இராமோத்து- கிலயாதின்மீது படையெடுத்துச் சென்றனர்.
2 நாளாகமம் 18 : 29 (ECTA)
இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேடத்தில் போருக்குச் செல்வேன்; நீரோ உம் அரச உடைகளை அணிந்து வாரும்” என்று சொல்லிவிட்டு, மாறு வேடத்தில் போருக்குச் சென்றான்.
2 நாளாகமம் 18 : 30 (ECTA)
சிரியா மன்னன் தன் தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி. “நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர் புரியாமல், இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான்.
2 நாளாகமம் 18 : 31 (ECTA)
ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், “இவன்தான் இஸ்ரயேலின் அரசன்!” என்று அவனோடு போரிடும்படி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது யோசபாத்து ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட, அவரும் அவருக்குத் துணையாக வந்து, எதிரிகள் அவனைவிட்டு விலகும்படி செய்தார்.
2 நாளாகமம் 18 : 32 (ECTA)
தேர்ப்படைத்தலைவர்கள், இவன் இஸ்ரயேலின் அரசன் இல்லையென்று கண்டு, அவனைத் துரத்தாமல் அகன்று போனார்கள்.
2 நாளாகமம் 18 : 33 (ECTA)
ஆனால், ஒரு மனிதன் தனது வில்லை நாணேற்றி குறி வைக்காமல் அம்பெய்தான். அது இஸ்ரயேல் அரசன் கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. ஆகாபு தன் தேரோட்டியிடம், “நான் காயமடைந்துள்ளேன், ஆதலால், நீ தேரைத் திருப்பி என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ” என்றான்.
2 நாளாகமம் 18 : 34 (ECTA)
அந்நாள் முழுவதும் கடும் போர் நடந்தது. இஸ்ரயேலின் அரசன் சிரியருக்கு எதிராகத் தன் தேரிலேயே நின்றுகொண்டு மாலைவரை போரிட்டான்; கதிரவன் மறையும் வேளையில் உயிர்விட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34