2 நாளாகமம் 15 : 1 (ECTA)
அசரியாவின் இறைவாக்கும் ஆசாவின் உடன்படிக்கையும் கடவுளின் ஆவி ஓதேதின் மகன் அசரியாவின்மேல் இறங்கியது.
2 நாளாகமம் 15 : 2 (ECTA)
உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கிக் கூறியது: “ஆசாவே! யூதா, பென்யமின் எல்லா மக்களே! கேளுங்கள். நீங்கள் ஆண்டவரை நாடினால், கண்டடைவீர்கள்; நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்.
2 நாளாகமம் 15 : 3 (ECTA)
இஸ்ரயேல் நெடுங்காலமாக உண்மைக் கடவுளைப் போதிக்கும் குருக்களையும் திருச்சட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
2 நாளாகமம் 15 : 4 (ECTA)
எனினும், இஸ்ரயேலர் தங்கள் துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்; அவ்வாறு, அவர்கள் தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர்.
2 நாளாகமம் 15 : 5 (ECTA)
அந்நாள்களில் ஒருவரும் அமைதியாகப் போகவோ வரவோ இயலவில்லை; ஏனெனில், நாடுகளில் குடியிருந்தோர் அனைவரிடையிலும் ஒரே குழப்பமாய் இருந்தது.
2 நாளாகமம் 15 : 6 (ECTA)
நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து, ஒன்றை ஒன்று நசுக்கின. ஏனெனில், கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களால் துன்புறுத்தினார்.
2 நாளாகமம் 15 : 7 (ECTA)
நீங்களோ மனத்திடன் கொள்ளுங்கள்; தளர்ந்துபோக வேண்டாம், ஏனெனில், உங்கள் செயல்களுக்கேற்ற கைம்மாறு கிடைக்கும்.”
2 நாளாகமம் 15 : 8 (ECTA)
ஓதேதின் மகன் இறைவாக்கினர் அசரியா உரைத்த இந்த இறைவாக்கைக் கேட்டபோது, ஆசா வீறுகொண்டெழுந்தான்; யூதா, பென்யமின் நாடுகளிலும், எப்ராயிம் மலைநாட்டில் தான் கைப்பற்றியிருந்த நகர்களிலும் காணப்பட்ட அருவருப்புகளை அகற்றினான்; ஆண்டவரது மண்டபத்தின்முன் இருந்த அவரது பலிபீடத்தைப் புதுப்பித்தான். * ‘இறைவாக்கினர் ஓதேது’ என்பது எபிரேய பாடம்..
2 நாளாகமம் 15 : 9 (ECTA)
பிறகு, யூதா, பென்யமின் மக்களையும், எப்ராயிம், மனாசே, சிமியோனிலிருந்து வந்து தங்களோடிருந்த அந்நியர் அனைவரையும் ஒன்று கூட்டினான். ஆசாவின் கடவுளாகிய ஆண்டவர் அவனோடிருந்ததைக் கண்டு, அவர்கள் இஸ்ரயேலைவிட்டு அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தனர்.
2 நாளாகமம் 15 : 10 (ECTA)
ஆசா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டின் மூன்றாம் மாதத்தில், அவர்கள் எருசலேமில் கூடினர்.
2 நாளாகமம் 15 : 11 (ECTA)
தாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு வந்த எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
2 நாளாகமம் 15 : 12 (ECTA)
அவர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நாடுவோம் என்றும்,
2 நாளாகமம் 15 : 13 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் நாடாமல் இருக்கிறார்களோ அவர்கள், சிறியோர் பெரியோர், ஆண் பெண் யாராயினும், சாவுக்கு உட்பட வேண்டும் என்றும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
2 நாளாகமம் 15 : 14 (ECTA)
எக்காளங்களும் கொம்புகளும் முழங்க, மிகுந்த ஆரவார ஆர்ப்பரிப்புடன் ஆண்டவரிடம் ஆணையிட்டார்கள்.
2 நாளாகமம் 15 : 15 (ECTA)
இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்; ஏனெனில், அவர்கள் தங்கள் முழு இதயத்தோடு ஆணையிட்டனர், ஆர்வத்துடன் அவரை நாடிக் கண்டடைந்தனர்; ஆண்டவரும் அவர்களுக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்.
2 நாளாகமம் 15 : 16 (ECTA)
அருவருப்பான அசேராக் கம்பம் ஒன்றை ஆசாவின் தாய் மாக்கா செய்திருந்தாள். அதனால், ஆசா அவளை ‘அரச அன்னை’ நிலையிலிருந்து நீக்கி விட்டான். மேலும், அவன் அக்கம்பத்தை உடைத்துத் தூள் தூளாக்கிக் கிதரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்தான்.
2 நாளாகமம் 15 : 17 (ECTA)
ஆனால், தொழுகை மேடுகள் இஸ்ரயேலினின்று அகற்றப்படவில்லை; இருப்பினும் ஆசாவின் இதயம் அவன் வாழ்நாள் முழுவதும் நிறைவுள்ளதாய் இருந்தது.
2 நாளாகமம் 15 : 18 (ECTA)
தன் தந்தையும் தானும் நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் மற்றும் ஏனைய பொருள்களையும் கடவுளின் இல்லத்தில் அவன் ஒப்படைத்தான்.
2 நாளாகமம் 15 : 19 (ECTA)
ஆசா ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டுவரை மீண்டும் போர் எழவில்லை.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19