2 நாளாகமம் 1 : 1 (ECTA)
சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்
(1 அர 3:1-15) தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார்.
2 நாளாகமம் 1 : 2 (ECTA)
சாலமோன், இஸ்ரயேலர் அனைவரையும் — ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்கள், நீதிபதிகள், இஸ்ரயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவரையும் — வரவழைத்துப் பேசினார்.
2 நாளாகமம் 1 : 3 (ECTA)
அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில், ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது.
2 நாளாகமம் 1 : 4 (ECTA)
ஆனால், இதற்குமுன் தாவீது கடவுளின் பேழையை கிரியத்து எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ஏற்கெனவே தாம் அதற்கென அமைத்திருந்த கூடாரத்தில் வைத்திருந்தார். [* 2 சாமு 6:1-7; 1 குறி 13:5-14; 15:25-16: 1 ]
2 நாளாகமம் 1 : 5 (ECTA)
இருப்பினும், கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர். [* விப 38:1- 7 ]
2 நாளாகமம் 1 : 6 (ECTA)
சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார்.
2 நாளாகமம் 1 : 7 (ECTA)
அன்றிரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்; கேள்” என்று கூறினார்.
2 நாளாகமம் 1 : 8 (ECTA)
அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, “என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்; அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்.
2 நாளாகமம் 1 : 9 (ECTA)
கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்; ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர். [* தொநூ 13:16; 28: 14 ]
2 நாளாகமம் 1 : 10 (ECTA)
எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில், கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?” என்றார்.
2 நாளாகமம் 1 : 11 (ECTA)
கடவுள், சாலமோனை நோக்கி, “செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய்.
2 நாளாகமம் 1 : 12 (ECTA)
எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன்” என்றார்.
2 நாளாகமம் 1 : 13 (ECTA)
சாலமோனின் ஆற்றலும் செல்வமும்
(1 அர 10:26-29) பிறகு, சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார்.
2 நாளாகமம் 1 : 14 (ECTA)
சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார். [* 1 அர 4: 26 ]
2 நாளாகமம் 1 : 15 (ECTA)
வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார்.
2 நாளாகமம் 1 : 16 (ECTA)
சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர். * இச 17:16..
2 நாளாகமம் 1 : 17 (ECTA)
அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுநூறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17