1 தீமோத்தேயு 3 : 1 (ECTA)
சபைக் கண்காணிப்பாளர் பண்புகள் சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார். இக்கூற்று உண்மையானது.
1 தீமோத்தேயு 3 : 2 (ECTA)
ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவி கொண்டவராயும்*, அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும். [* தீத் 1:6- 9 ; இதனை ‘ஒரேமுறை திருமணம் செய்தவராகவும்’ எனவும் மொழிபெயர்க்கலாம். ]
1 தீமோத்தேயு 3 : 3 (ECTA)
அவர் குடிவெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தவராய் இருக்க வேண்டும்; சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும்; [* தீத் 1:6- 9 ]
1 தீமோத்தேயு 3 : 4 (ECTA)
தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். [* தீத் 1:6- 9 ]
1 தீமோத்தேயு 3 : 5 (ECTA)
தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்? [* தீத் 1:6- 9 ]
1 தீமோத்தேயு 3 : 6 (ECTA)
திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராகக் கூடாது. அவ்வாறு ஆவாரானால் அவர் தற்பெருமை கொள்ளலாம். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அவர் அடைய நேரிடும். [* தீத் 1:6- 9 ]
1 தீமோத்தேயு 3 : 7 (ECTA)
சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் நற்சான்று பெற்றவராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இழி சொல்லுக்கு ஆளாகலாம்; அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம். [* தீத் 1:6- 9 ]
1 தீமோத்தேயு 3 : 8 (ECTA)
திருத்தொண்டர் பண்புகள் அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியமுடையவர்களாக இருக்க வேண்டும்; இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இழிவான ஊதியத்தின் மேல் ஆசை உள்ளவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை!
1 தீமோத்தேயு 3 : 9 (ECTA)
தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வர வேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 10 (ECTA)
முதலில் இவர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குறையற்றவர்கள் எனக் காணப்பட்டால் திருப்பணியாற்றலாம்.
1 தீமோத்தேயு 3 : 11 (ECTA)
அதுபோலவே பெண்களும் கண்ணியமுடையவராயும் புறங்கூறாதவராயும் அறிவுத்தெளிவு உடையவராயும் எல்லாவற்றிலும் நம்பத்தக்கவராயும் இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 12 (ECTA)
திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும்,* பிள்ளைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவாகளாயும் இருக்கவேண்டும். [* இதனை ‘ஒரேமுறை திருமணம் செய்தவராகவும்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.. ]
1 தீமோத்தேயு 3 : 13 (ECTA)
நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயர் மதிப்புப் பெறுவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையைக் குறித்து அதிகத் துணிவோடு பேசுவர்.
1 தீமோத்தேயு 3 : 14 (ECTA)
சமயத்தின் உயர்வான மறைஉண்மை நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன் இவற்றை உனக்கு எழுதுகிறேன்.
1 தீமோத்தேயு 3 : 15 (ECTA)
நான் வரக் காலந்தாழ்த்தினால், நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை; இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது.
1 தீமோத்தேயு 3 : 16 (ECTA)
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு: “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்;
மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16