1 தெசலோனிக்கேயர் 5 : 1 (ECTA)
சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை.
1 தெசலோனிக்கேயர் 5 : 2 (ECTA)
ஏனெனில், திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். [* மத் 24:43; லூக் 12:39; 2 பேது 3: 10 ]
1 தெசலோனிக்கேயர் 5 : 3 (ECTA)
“எங்கும் அமைதி, ஆபத்து இல்லை” என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.
1 தெசலோனிக்கேயர் 5 : 4 (ECTA)
ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே, அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.
1 தெசலோனிக்கேயர் 5 : 5 (ECTA)
நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
1 தெசலோனிக்கேயர் 5 : 6 (ECTA)
ஆகவே, மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 7 (ECTA)
உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்; குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர்.
1 தெசலோனிக்கேயர் 5 : 8 (ECTA)
ஆனால், பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம். * எசா 59:17; எபே 6:13-17..
1 தெசலோனிக்கேயர் 5 : 9 (ECTA)
ஏனெனில், கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 10 (ECTA)
நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 11 (ECTA)
ஆகவே, நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 12 (ECTA)
6.பொது அறிவுரைகள் சகோதர சகோதரிகளே! உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 13 (ECTA)
அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள். உங்களிடையே அமைதி நிலவட்டும்.
1 தெசலோனிக்கேயர் 5 : 14 (ECTA)
அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே; சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்; மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோர்க்கு உதவுங்கள்; எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 15 (ECTA)
எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 16 (ECTA)
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 17 (ECTA)
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 18 (ECTA)
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
1 தெசலோனிக்கேயர் 5 : 19 (ECTA)
தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 20 (ECTA)
இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 21 (ECTA)
அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 22 (ECTA)
எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 23 (ECTA)
7.முடிவுரை அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!
1 தெசலோனிக்கேயர் 5 : 24 (ECTA)
உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 25 (ECTA)
சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 26 (ECTA)
தூய முத்தம் கொடுத்து ஒருவர் ஒருவரை வாழ்த்துங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 27 (ECTA)
அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5 : 28 (ECTA)
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!
❮
❯