1 சாமுவேல் 8 : 1 (ECTA)
இஸ்ரயேலர் தங்களுக்கு ஓர் அரசனை வேண்டல் சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.
1 சாமுவேல் 8 : 2 (ECTA)
அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்; இளையவனின் பெயர் அபியா; இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.
1 சாமுவேல் 8 : 3 (ECTA)
ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.
1 சாமுவேல் 8 : 4 (ECTA)
எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.
1 சாமுவேல் 8 : 5 (ECTA)
அவர்கள் அவரிடம், “இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்” என்று கேட்டுக் கொண்டனர். [* இச 17: 14 ]
1 சாமுவேல் 8 : 6 (ECTA)
‘எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்’ என்று அவர்கள் கேட்டது சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.
1 சாமுவேல் 8 : 7 (ECTA)
ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர்.
1 சாமுவேல் 8 : 8 (ECTA)
நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்து அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.
1 சாமுவேல் 8 : 9 (ECTA)
இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால், அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து”.
1 சாமுவேல் 8 : 10 (ECTA)
ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.
1 சாமுவேல் 8 : 11 (ECTA)
“உங்கள் மீது ஆட்சி செய்யும் அரசனின் உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான்.
1 சாமுவேல் 8 : 12 (ECTA)
அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.
1 சாமுவேல் 8 : 13 (ECTA)
மேலும், அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும், வைத்துக்கொள்வான்.
1 சாமுவேல் 8 : 14 (ECTA)
அவன், உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான்.
1 சாமுவேல் 8 : 15 (ECTA)
உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான்.
1 சாமுவேல் 8 : 16 (ECTA)
உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில்* சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். * ‘இளைஞர்கள்’ என்பது எபிரேய பாடம்..
1 சாமுவேல் 8 : 17 (ECTA)
உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளர்களாய் இருப்பீர்கள்.
1 சாமுவேல் 8 : 18 (ECTA)
அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.”
1 சாமுவேல் 8 : 19 (ECTA)
மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.
1 சாமுவேல் 8 : 20 (ECTA)
அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார்” என்றனர்.
1 சாமுவேல் 8 : 21 (ECTA)
மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.
1 சாமுவேல் 8 : 22 (ECTA)
ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “அவர்கள் குரலுக்குச் செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு, சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, “ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22