1 சாமுவேல் 30 : 1 (ECTA)
அமலேக்கியரோடு போர் மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாகை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு; சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாகைத் தாக்கித் தீக்கிரையாக்கினர்.
1 சாமுவேல் 30 : 2 (ECTA)
அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.
1 சாமுவேல் 30 : 3 (ECTA)
தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது ,அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
1 சாமுவேல் 30 : 4 (ECTA)
அப்பொழுது தாவீதும் அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.
1 சாமுவேல் 30 : 5 (ECTA)
தாவீதின் இருமனைவியராகிய இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். [* 1 சாமு 25:42- 43 ]
1 சாமுவேல் 30 : 6 (ECTA)
தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்; வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால், தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமை பெற்றிருந்தார்.
1 சாமுவேல் 30 : 7 (ECTA)
பின்பு, தாவீது, அகிமலக்கின் மகன் குரு அபயத்தாரிடம், “ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்!” என்று கூறவே அபியத்தார் ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார். * 1 சாமு 22:22-25..
1 சாமுவேல் 30 : 8 (ECTA)
அப்பொழுது தாவீது, “நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா?” என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர், ‘பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! சிறைப்பட்டோரை மீட்பதும் உறுதி” என்று பதிலளித்தார்.
1 சாமுவேல் 30 : 9 (ECTA)
ஆதலால், தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தனர். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.
1 சாமுவேல் 30 : 10 (ECTA)
எனவே, தாவீது நானூறு பேரோடு அவர்களைப் பின்தொடர்ந்தார்; களைப்படைந்த இருநூறு பேர், பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.
1 சாமுவேல் 30 : 11 (ECTA)
வயல் வெளியில் ஓர் எகிப்தியனைக் கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்; உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுத்தனர்.
1 சாமுவேல் 30 : 12 (ECTA)
மேலும், அவர்கள் அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்குக் கொடுத்தனர். அவன் இவற்றைச் சாப்பிட்டபின் புத்துயிர் பெற்றான். ஏனெனில், அவன் இரவு பகல் மூன்று நாளாய் அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
1 சாமுவேல் 30 : 13 (ECTA)
தாவீது அவனை நோக்கி, “நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஒர் எகிப்திய இளைஞன்; ஓர் அமலேக்கிய மனிதரின் பணியாள்; நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு முன் என் தலைவர் என்னை விட்டுச் சென்றார்.
1 சாமுவேல் 30 : 14 (ECTA)
நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாகைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம்” என்று பதிலளித்தான்.
1 சாமுவேல் 30 : 15 (ECTA)
தாவீது அவனிடம், “அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?” என்று கேட்க, அவன், “என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்; அப்பொழுது அக்கூட்டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன்” என்றான்.
1 சாமுவேல் 30 : 16 (ECTA)
அவ்வாறே, அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த மாபெரும் கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.
1 சாமுவேல் 30 : 17 (ECTA)
தாவீது அன்று மாலை தொடங்கி மறுநாள் மாலை வரை அவர்களோடு போரிட்டார்; ஒட்டகங்கள் மீது ஏறி ஓடிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.
1 சாமுவேல் 30 : 18 (ECTA)
அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.
1 சாமுவேல் 30 : 19 (ECTA)
அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்களில் அனைத்தையும் தாவீது மீட்டுக் கொண்டு வந்தார்.
1 சாமுவேல் 30 : 20 (ECTA)
ஆடு மாடுகள் எல்லாவற்றையும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்கு முன் ஓட்டிவந்த மக்கள், “இது தாவீதின் கொள்ளைப் பொருள்” என்றனர்.
1 சாமுவேல் 30 : 21 (ECTA)
பின்பு, களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்; அப்போது அவர்கள் தாவீதையும் அவரோடு இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தனர். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.
1 சாமுவேல் 30 : 22 (ECTA)
ஆனால், தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், “அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் ஒன்றும் அளிக்க மாட்டோம்; அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும்” என்றனர்.
1 சாமுவேல் 30 : 23 (ECTA)
அதற்குத்தாவீது, “என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது; அவரே நம்மைக் காப்பாற்றி, நமக்கெதிராக வந்த கொள்ளைக் கூட்டத்தினரை நம் கையில் ஒப்படைத்தார்.
1 சாமுவேல் 30 : 24 (ECTA)
இதன் பொருட்டு நீங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்? ஏனெனில், போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவுதான் நான் போர்ப் பொருள்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்; இருவரின் பங்கும் சமமாகவே இருக்கும்” என்றார்.
1 சாமுவேல் 30 : 25 (ECTA)
இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமமும் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.
1 சாமுவேல் 30 : 26 (ECTA)
தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: “இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன்” என்றார்.
1 சாமுவேல் 30 : 27 (ECTA)
பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்; பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தோர்.
1 சாமுவேல் 30 : 28 (ECTA)
அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்.
1 சாமுவேல் 30 : 29 (ECTA)
இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனியரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்;
1 சாமுவேல் 30 : 30 (ECTA)
ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்;
1 சாமுவேல் 30 : 31 (ECTA)
எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களிலும் இருந்தோர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31