1 சாமுவேல் 26 : 1 (ECTA)
தாவீது சவுலை மீண்டும் கொல்லாது விடல் பின்னர், சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறினார். * திப 54 தலைப்பு..
1 சாமுவேல் 26 : 2 (ECTA)
ஆதலால், சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
1 சாமுவேல் 26 : 3 (ECTA)
சவுல், எசிமோனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால், தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து,
1 சாமுவேல் 26 : 4 (ECTA)
தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.
1 சாமுவேல் 26 : 5 (ECTA)
உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்; சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்; சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.
1 சாமுவேல் 26 : 6 (ECTA)
அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, “சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்?” என்று கேட்க “உம்முடன் நான் வருகிறேன்” என்று அபிசாய் பதிலளித்தான்.
1 சாமுவேல் 26 : 7 (ECTA)
ஆதலால், தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தலையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர்.
1 சாமுவேல் 26 : 8 (ECTA)
அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்றான்.
1 சாமுவேல் 26 : 9 (ECTA)
ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.
1 சாமுவேல் 26 : 10 (ECTA)
மேலும், தாவீது, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும்; அவர் காலம் நிறைவுற்றுத் தாமாக இறக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்!
1 சாமுவேல் 26 : 11 (ECTA)
ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே, அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்” என்றார். [* 1 சாமு 24: 6 ]
1 சாமுவேல் 26 : 12 (ECTA)
அவ்வாறே, தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டபின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவுமில்லை; அறியவுமில்லை; ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
1 சாமுவேல் 26 : 13 (ECTA)
பின்பு, தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது.
1 சாமுவேல் 26 : 14 (ECTA)
அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னேரையும் தாவீது கூப்பிட்டு, “அப்னேர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா?” என்று கேட்டார். அப்னேர் அதற்கு, “அரசரை நேராக அழைக்க நீ யார்?” என்று கேட்டான்.
1 சாமுவேல் 26 : 15 (ECTA)
அப்போது தாவீது அப்னேரிடம், “நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் உன் தலைவராகிய அரசரை விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்ல அங்கு வந்தானே!
1 சாமுவேல் 26 : 16 (ECTA)
நீ செய்த இச்செயல் சரியல்ல; ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று வாழும் ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியும் அவர் தலைமாட்டிலிருந்த தண்ணீர் குவளையும் இப்போது எங்கே உள்ளன என்று பார்” என்றார்.
1 சாமுவேல் 26 : 17 (ECTA)
சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?” என்று கேட்க, அதற்குத் தாவீது,“என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான்” என்றார்.
1 சாமுவேல் 26 : 18 (ECTA)
மீண்டும் அவர், “என் தலைவராகிய நீர் உம் அடியானைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம்தான் என்ன?
1 சாமுவேல் 26 : 19 (ECTA)
ஆதலால், இப்பொழுது அரசராகிய என் தலைவர் தம் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்; மனிதர்கள் அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில், ‘நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிபடு’ என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெறுவதிலிருந்து என்னை இந்நாளில் துரத்திவிட்டனர்.
1 சாமுவேல் 26 : 20 (ECTA)
ஆதலால், ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில், மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல், இஸ்ரயேலின் அரசர் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார்” என்றார்.
1 சாமுவேல் 26 : 21 (ECTA)
அப்பொழுது சவுல், “நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி உனக்கு நான் எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்” என்றார்.
1 சாமுவேல் 26 : 22 (ECTA)
தாவீது மறுமொழியாக, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும்.
1 சாமுவேல் 26 : 23 (ECTA)
அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.
1 சாமுவேல் 26 : 24 (ECTA)
இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக!” என்றார்.
1 சாமுவேல் 26 : 25 (ECTA)
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, “என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பல காரியங்களைச் செய்வாய்; அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர், தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25