1 சாமுவேல் 22 : 1 (ECTA)
குருக்களைச் சவுல் கொலை செய்தல் தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர். * திபா 57 தலைப்பு; திபா 42 தலைப்பு.
1 சாமுவேல் 22 : 2 (ECTA)
ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு, அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.
1 சாமுவேல் 22 : 3 (ECTA)
தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, “கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்,” என்று வேண்டினார்.
1 சாமுவேல் 22 : 4 (ECTA)
பின்பு, அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில்* இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர். * ‘அரண்’ என்பது எபிரேய பாடம்.
1 சாமுவேல் 22 : 5 (ECTA)
பின்பு, இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு, “நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!” என்றார். எனவே, தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.
1 சாமுவேல் 22 : 6 (ECTA)
தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
1 சாமுவேல் 22 : 7 (ECTA)
சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, “பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா?
1 சாமுவேல் 22 : 8 (ECTA)
பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்” என்றார்.
1 சாமுவேல் 22 : 9 (ECTA)
அப்பொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்; * 1 சாமு 21:7-9; திபா 52 தலைப்பு..
1 சாமுவேல் 22 : 10 (ECTA)
அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்”, என்றான். * 1 சாமு 21:7-9; திபா 52 தலைப்பு..
1 சாமுவேல் 22 : 11 (ECTA)
அதைக்கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர்.
1 சாமுவேல் 22 : 12 (ECTA)
அப்பொழுது சவுல், “அகித்தூபின் மகனே கேள்”, என அவரும், “இதோ உள்ளேன் என் தலைவரே!” என்றார்.
1 சாமுவேல் 22 : 13 (ECTA)
சவுல் அவரிடம், “நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து அவனுக்காக கடவுளின் திருவுளத்தைக் கேட்டறிந்தாய்?” என்று கேட்டார்.
1 சாமுவேல் 22 : 14 (ECTA)
அதற்கு அகிமெலக்கு அரசரிடம், “உம் பணியாளர் அனைவரிலும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டாரிடையே மேன்மை பெற்றவன் அன்றோ?
1 சாமுவேல் 22 : 15 (ECTA)
அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடவையா? இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில், உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார்.
1 சாமுவேல் 22 : 16 (ECTA)
அரசர் அவரிடம் “அகிமெலக்கு, நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்” என்றார்.
1 சாமுவேல் 22 : 17 (ECTA)
அரசர் தம்மைச் சூழ்ந்து நின்ற காவலர்களிடம், “நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில், அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்குத் தெரிவிக்கவில்லை” என்றார். ஆனால், அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வரவில்லை.
1 சாமுவேல் 22 : 18 (ECTA)
அப்பொழுது அரசர் தோயேகிடம், “நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து”, என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.
1 சாமுவேல் 22 : 19 (ECTA)
மேலும், அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.
1 சாமுவேல் 22 : 20 (ECTA)
ஆனால், அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.
1 சாமுவேல் 22 : 21 (ECTA)
ஆண்டவரின் குருக்களைச் சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.
1 சாமுவேல் 22 : 22 (ECTA)
தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியன் தோயேகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!
1 சாமுவேல் 22 : 23 (ECTA)
என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால், என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23