1 சாமுவேல் 10 : 1 (ECTA)
அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: “ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ?
1 சாமுவேல் 10 : 2 (ECTA)
இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குவில் ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம் "நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன; இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி ‘என் மகனுக்காக என் செய்வேன்?’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்" என்று சொல்வார்கள்.
1 சாமுவேல் 10 : 3 (ECTA)
நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று தாபோரிலுள்ள கருவாலி மரத்தை அடைவாய். அங்குக் கடவுளை வழிபட பெத்தேலுக்குச் செல்லும் மூன்று மனிதர்கள் உன்னைச் சந்திப்பார்கள். ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் ஒரு தோற்பை திராட்சை இரசத்தையும் கொண்டிருப்பார்கள்.
1 சாமுவேல் 10 : 4 (ECTA)
அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.
1 சாமுவேல் 10 : 5 (ECTA)
அதன் பிறகு, பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஓர் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுக்கு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவசமடைந்து பேசுவர்.
1 சாமுவேல் 10 : 6 (ECTA)
பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
1 சாமுவேல் 10 : 7 (ECTA)
இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
1 சாமுவேல் 10 : 8 (ECTA)
பிறகு நீ எனக்கு முன்பாக கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு.”
1 சாமுவேல் 10 : 9 (ECTA)
சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.
1 சாமுவேல் 10 : 10 (ECTA)
அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வலிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.
1 சாமுவேல் 10 : 11 (ECTA)
அவரை ஏற்கெனவே அறிந்தவர்கள் அவர் இறைவாக்கினரோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்று கேட்டுக் கொண்டனர்.
1 சாமுவேல் 10 : 12 (ECTA)
அதற்கு அங்கிருந்தவருள் ஒருவன், “இவர்கள் தந்தை யார்?” என்று கேட்டான். ஆகவே, “சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்ற பழமொழி உருவாயிற்று. * 1 சாமு 19:23-24..
1 சாமுவேல் 10 : 13 (ECTA)
அவர் பரவசமடைந்து பேசி முடித்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.
1 சாமுவேல் 10 : 14 (ECTA)
அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, “நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று வினவ, அவர், “நாங்கள் கழுதைகளைத் தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே, சாமுவேலிடம் சென்றோம்” என்று சொன்னார்.
1 சாமுவேல் 10 : 15 (ECTA)
சவுலின் சிற்றப்பன், “சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல்” என்றார்.
1 சாமுவேல் 10 : 16 (ECTA)
சவுல் தம் சிற்றப்பனிடம், “கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார்” என்றார். ஆனால், அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.
1 சாமுவேல் 10 : 17 (ECTA)
சவுல் அரசராய் ஏற்படுத்தப்படல் சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.
1 சாமுவேல் 10 : 18 (ECTA)
பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலை எகிப்தினின்று கொண்டு வந்தேன். எகிப்தியர் கையினின்றும் உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்றும் நான் உங்களை விடுவித்தேன்.
1 சாமுவேல் 10 : 19 (ECTA)
நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு, ‘எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும்’ என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே, உங்கள் குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்’.”
1 சாமுவேல் 10 : 20 (ECTA)
பிறகு, சாமுவேல் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.
1 சாமுவேல் 10 : 21 (ECTA)
பென்யமின் குலத்தை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின்மீதும் பிறகு கீசின் மகன் சவுல் மீதும் சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.
1 சாமுவேல் 10 : 22 (ECTA)
“ஆள் இங்கே வந்துவிட்டானா?” என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் “ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளான்” என்று கூறினார்.
1 சாமுவேல் 10 : 23 (ECTA)
அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது, அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அனைவரும் அவர் தோளுயரமே இருந்தார்கள்.
1 சாமுவேல் 10 : 24 (ECTA)
சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி,“ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறொருவரும் உண்டோ?” என்றார். அப்போது மக்கள் அனைவரும் 'அரசர் நீடூழி வாழ்க!' என்று ஆர்ப்பரித்தனர்.
1 சாமுவேல் 10 : 25 (ECTA)
சாமுவேல் அரசின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அதை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு, மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.
1 சாமுவேல் 10 : 26 (ECTA)
சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.
1 சாமுவேல் 10 : 27 (ECTA)
ஆனால், தீயோர் சிலர், “இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்?” என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27