1 சாமுவேல் 1 : 1 (ECTA)
சீலோவில் எல்கானா எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.
1 சாமுவேல் 1 : 2 (ECTA)
அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை.
1 சாமுவேல் 1 : 3 (ECTA)
எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குக் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர்.
1 சாமுவேல் 1 : 4 (ECTA)
எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.
1 சாமுவேல் 1 : 5 (ECTA)
அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில், ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். * எபிரேயத்தில், ‘அன்பு கொண்டிருந்ததால்…இரண்டு பங்கை’ எனவும் பொருள்படும்.
1 சாமுவேல் 1 : 6 (ECTA)
ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.
1 சாமுவேல் 1 : 7 (ECTA)
இவ்வாறு, ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.
1 சாமுவேல் 1 : 8 (ECTA)
அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி “அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்றோ?” என்பார்.
1 சாமுவேல் 1 : 9 (ECTA)
அன்னாவும் ஏலியும் ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
1 சாமுவேல் 1 : 10 (ECTA)
அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.
1 சாமுவேல் 1 : 11 (ECTA)
அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது; “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.” [* எண் 6: 5 ]
1 சாமுவேல் 1 : 12 (ECTA)
அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.
1 சாமுவேல் 1 : 13 (ECTA)
அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை, ஆகவே, ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.
1 சாமுவேல் 1 : 14 (ECTA)
ஏலி அவரை நோக்கி, “எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து” என்றார்.
1 சாமுவேல் 1 : 15 (ECTA)
அதற்கு அன்னா மறுமொழியாக, “இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.
1 சாமுவேல் 1 : 16 (ECTA)
உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.
1 சாமுவேல் 1 : 17 (ECTA)
பிறகு ஏலி, “மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்” என்று பதிலளித்தார்,
1 சாமுவேல் 1 : 18 (ECTA)
அதற்கு அன்னா, “உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக!” என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.
1 சாமுவேல் 1 : 19 (ECTA)
சாமுவேலின் பிறப்பு அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்.
1 சாமுவேல் 1 : 20 (ECTA)
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார்.
1 சாமுவேல் 1 : 21 (ECTA)
எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.
1 சாமுவேல் 1 : 22 (ECTA)
ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், “பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்” என்று சொன்னார்.
1 சாமுவேல் 1 : 23 (ECTA)
அவர் கணவர் எல்கானா, “உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே, அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்.
1 சாமுவேல் 1 : 24 (ECTA)
அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்.
1 சாமுவேல் 1 : 25 (ECTA)
அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.
1 சாமுவேல் 1 : 26 (ECTA)
பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.
1 சாமுவேல் 1 : 27 (ECTA)
இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.
1 சாமுவேல் 1 : 28 (ECTA)
ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள்* ஆண்டவரைத் தொழுதார்கள். * ‘அவர்’ என்பது எபிரேய பாடம்..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28