1 இராஜாக்கள் 22 : 1 (ECTA)
இறைவாக்கினர் மீக்காயா ஆகாபைக் கண்டித்தல்
(2 குறி 18:2-27)
மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை.
1 இராஜாக்கள் 22 : 2 (ECTA)
ஆனால், மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்து இஸ்ரயேலின் அரசனான ஆகாபைக் காண வந்தான்.
1 இராஜாக்கள் 22 : 3 (ECTA)
இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி, “இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும், அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமா?” என்று கூறியிருந்தான்.
1 இராஜாக்கள் 22 : 4 (ECTA)
எனவே. அவன் யோசபாத்திடம், “இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 5 (ECTA)
யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும்” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 6 (ECTA)
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, “நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.
1 இராஜாக்கள் 22 : 7 (ECTA)
பின்பு யோசபாத்து, “ஆண்டவரின் திருவாக்கினருள், ஒருவரேனும் இங்கில்லையா? அவரிடமும் இதுபற்றி நாம் கேட்டறியலாமே?” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 8 (ECTA)
அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன்மூலம் ஆண்டவரைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால், அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில், அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான்” என்றான். அதற்கு யோசபாத்து, “அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம்” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 9 (ECTA)
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஒர் அண்ணகனைக் கூப்பிட்டு, “இம்லாவின் மகன் மீக்காயாவை விரைவில் அழைத்து வா” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 10 (ECTA)
இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை பூண்டு தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அவர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர்.
1 இராஜாக்கள் 22 : 11 (ECTA)
கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “‘இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அவர்களை அழித்துவிடுவீர்,’ என்று ஆண்டவர் கூறுகின்றார்” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 12 (ECTA)
அவ்வாறே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் வாக்குரைத்துக்கொண்டிருந்தனர்; “இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி கொள்வீர். ஏனெனில், அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.
1 இராஜாக்கள் 22 : 13 (ECTA)
மீக்காயாவை அழைக்கச் சென்ற தூதன் அவரிடம், “இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கு அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்!” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 14 (ECTA)
அதற்கு மீக்காயா, “ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன்” என்றார்.
1 இராஜாக்கள் 22 : 15 (ECTA)
அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி “மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர், “போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்!” என்றார்.
1 இராஜாக்கள் 22 : 16 (ECTA)
அப்பொழுது அரசன் அவரிடம், “ஆண்டவர் பெயரால் உண்மையைத் தவிர வேறெதையும் என்னிடம் சொல்லலாகாது என்று எத்தனை முறை உன்னை ஆணையிட வைப்பது?” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 17 (ECTA)
அதற்கு அவர், “இஸ்ரயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர் கூறியது: இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவனும் அமைதியாகத் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்” என்றார். [* எண் 27:17; மத் 9:36; மாற் 6: 34 ]
1 இராஜாக்கள் 22 : 18 (ECTA)
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “‘இவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைப்பான்’ என்று உம்மிடம் நான் கூறவில்லையா?” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 19 (ECTA)
மீக்காயா மீண்டும் கூறியது: “ஆண்டவரின் வாக்கைக் கேளும்; ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர். * எசா 6:1; யோபு 1:6..
1 இராஜாக்கள் 22 : 20 (ECTA)
அப்பொழுது ஆண்டவர் ‘இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் தூண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?’ என்று கேட்டார். அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்றைச் சொன்னான்.
1 இராஜாக்கள் 22 : 21 (ECTA)
இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, ‘நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.’ என்றது. அதற்கு ஆண்டவர், ‘அது எப்படி?’ என்றார்.
1 இராஜாக்கள் 22 : 22 (ECTA)
அப்பொழுது அது, ‘நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்’ என்றது. அதற்கு அவர், ‘நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்’ என்றார்.
1 இராஜாக்கள் 22 : 23 (ECTA)
ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார்” என்றார்.
1 இராஜாக்கள் 22 : 24 (ECTA)
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா, மீக்காயாவின் அருகே வந்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, “ஆண்டவரின் ஆவி உன்னிடம் பேசும்படி எப்படி என்னை விட்டுவிட்டு வந்தது?” என்று கேட்டான்.
1 இராஜாக்கள் 22 : 25 (ECTA)
அதற்கு மீக்காயா, “நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய்” என்றார்.
1 இராஜாக்கள் 22 : 26 (ECTA)
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் கட்டளையிட்டது: “மீக்காயாவைக் கைது செய்து அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும் அரசனின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
1 இராஜாக்கள் 22 : 27 (ECTA)
நீங்கள், ‘அரசர் கூறுவது இதுவே; போரை முடித்து நலமாய் நான் திரும்பும் வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள். இவனுக்குச் சிறிதளவு அப்பமும் தண்ணீருமே கொடுத்து வாருங்கள்” என்றும் கூறுங்கள்.
1 இராஜாக்கள் 22 : 28 (ECTA)
அப்பொழுது மீக்காயா, “நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
1 இராஜாக்கள் 22 : 29 (ECTA)
ஆகாபின் சாவு
(2 குறி 18:28-34)
பின்பு, இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர்.
1 இராஜாக்கள் 22 : 30 (ECTA)
இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால், நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறே, இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.
1 இராஜாக்கள் 22 : 31 (ECTA)
இப்படியிருக்க, சிரியாவின் மன்னன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி, “நீங்கள் சிறியோர், பெரியோர் யாரோடும் போரிடாமல் இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான்.
1 இராஜாக்கள் 22 : 32 (ECTA)
ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், இவன்தான் இஸ்ரயேலின் அரசன் என்று நினைத்து அவனைத் தாக்குவதற்காக அவன்மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது யோசபாத்து பெரும் கூக்குரலிட்டான்.
1 இராஜாக்கள் 22 : 33 (ECTA)
அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை.
1 இராஜாக்கள் 22 : 34 (ECTA)
ஆயினும், ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே, அவன் தன் தேரோட்டியை நோக்கி, “தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில், நான் காயமுற்றிருக்கிறேன்” என்றான்.
1 இராஜாக்கள் 22 : 35 (ECTA)
அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான்.
1 இராஜாக்கள் 22 : 36 (ECTA)
கதிரவன் மறைந்த நேரத்தில் ‘ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்’ என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது.
1 இராஜாக்கள் 22 : 37 (ECTA)
இவ்வாறு,அரசன் இறந்து, சமாரியாவிற்குக் கொண்டு வரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர்.
1 இராஜாக்கள் 22 : 38 (ECTA)
சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின.
1 இராஜாக்கள் 22 : 39 (ECTA)
ஆகாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் மாளிகை கட்டியதும், பல்வேறு நகர்கள் எழுப்பியதும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
1 இராஜாக்கள் 22 : 40 (ECTA)
ஆகாபு தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் மகன் அகசியா அரியணை ஏறினான்.
1 இராஜாக்கள் 22 : 41 (ECTA)
யூதா அரசன் யோசபாத்து
(2 குறி 20:31-21:1)
இஸ்ரயேலின் அரசன் ஆகாபு ஆட்சி தொடங்கிய நான்காம் ஆண்டில், ஆசாவின் மகன் யோசபாத்து யூதாவின் அரசன் ஆனான்.
1 இராஜாக்கள் 22 : 42 (ECTA)
யோசபாத்து ஆட்சி தொடங்கிய பொழுது, அவனுக்கு வயது முப்பத்தைந்து. அவன் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான். சில்கியின் மகளான அசுபா என்பவளே அவனுடைய தாய்.
1 இராஜாக்கள் 22 : 43 (ECTA)
அவன் தன் தந்தை ஆசாவின் வழிகள் அனைத்திலும் நடந்தான். அவற்றினின்று அவன் பிறழவில்லை. ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்துகொண்டான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை உடைத்தெறியவில்லை. மக்கள் அம்மேடைகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தனர்.
1 இராஜாக்கள் 22 : 44 (ECTA)
யோசபாத்து இஸ்ரயேலின் அரசனுடன் நல்லுறவு கொண்டிருந்தான்.
1 இராஜாக்கள் 22 : 45 (ECTA)
யோசபாத்தின் பிற செயல்களும், அவன் காட்டிய வீரமும், அவன் புரிந்த போர்களும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
1 இராஜாக்கள் 22 : 46 (ECTA)
அவன் தந்தை ஆசாவின் காலத்தில் எஞ்சியிருந்த விலை ஆடவர்களுள் ஒருவரும் நாட்டில் இராதவாறு யோசபாத்து அவர்களை ஒழித்துக்கட்டினான்.
1 இராஜாக்கள் 22 : 47 (ECTA)
அப்போது ஏதோமில் மன்னன் இல்லாததால் ஒரு பிரதிநிதியே மன்னனாய் இருந்தான்.
1 இராஜாக்கள் 22 : 48 (ECTA)
யோசபாத்து தங்கம் கொண்டு வருவதற்காக ஓபீருக்குச் செல்லும் தர்சீசுக் கப்பல்களைக் கட்டினான். ஆனால், அவை அங்குப் போய்ச் சேரவில்லை. ஏனெனில், அவை எசியோன் கெபேரில் உடைந்து போயின.
1 இராஜாக்கள் 22 : 49 (ECTA)
அப்போது ஆகாபின் மகன் அகசியா யோசபாத்தை நோக்கி, “என்னுடைய பணியாளர் உம் பணியாளரோடு கப்பலில் செல்லட்டும்” என்று கேட்டுக்கொண்டான். ஆனால், அதற்கு யோசபாத்து இணங்கவில்லை.
1 இராஜாக்கள் 22 : 50 (ECTA)
இஸ்ரயேல் அரசன் அகசியா யோசபாத்து தன் மூதாதையருடன் துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
1 இராஜாக்கள் 22 : 51 (ECTA)
யூதாவின் அரசன் யோசபாத்தின் பதினேழாம் ஆட்சி ஆண்டில் ஆகாபின் மகன் அகசியா இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
1 இராஜாக்கள் 22 : 52 (ECTA)
அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலும் தம் தாயின் வழியிலும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் வழியிலும் நடந்தான்.
1 இராஜாக்கள் 22 : 53 (ECTA)
மேலும், அவன் பாகாலையும் வணங்கி வழிபட்டு எல்லாவற்றிலும் தன் தந்தை வழிநின்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53