1 இராஜாக்கள் 13 : 1 (ECTA)
எரொபவாம் தூபம் காட்டப் பீடத்தருகில் நிற்கையில், இதோ இறையடியார் ஒருவர் ஆண்டவரின் சொற்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார்.
1 இராஜாக்கள் 13 : 2 (ECTA)
ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க அவர் அப்பீடத்திற்கு எதிராகக் குரலெழுப்பி, “பலிபீடமே! பலிபீடமே! இதோ, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மீது தூபத்தை எரிக்கும் தொழுகைமேடுகளின் குருக்களை உன்மீதே பலியிடுவான்! மனிதரின் எலும்புகளை உன்மீது சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்” என்றார். * 2 அர 23:15-16..
1 இராஜாக்கள் 13 : 3 (ECTA)
“பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்; இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்; அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும்” என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.
1 இராஜாக்கள் 13 : 4 (ECTA)
பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்” என்றான். நீட்டிய கை விறைத்து நின்று விட்டது; அதை அவனால் மடக்க முடியவில்லை.
1 இராஜாக்கள் 13 : 5 (ECTA)
ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க இறையடியார் கொடுத்திருந்த அடையாளத்திற்கேற்ப, பலிபீடம் இடிந்து விழுந்தது; அதன் மேலிருந்த சாம்பலும் கீழே கொட்டியது.
1 இராஜாக்கள் 13 : 6 (ECTA)
அப்போது அரசன் இறையடியாரை நோக்கி, “எனக்காக நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இறைஞ்சி மன்றாடும்; என் கை முன்போல் ஆகிவிடும்” என்றான். அவ்வாறே இறையடியார் ஆண்டவரை நோக்கி மன்றாட, அரசனது கை முன் போல் ஆயிற்று.
1 இராஜாக்கள் 13 : 7 (ECTA)
அப்பொழுது அரசன் இறையடியாரிடம், “நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன்” என்றான்.
1 இராஜாக்கள் 13 : 8 (ECTA)
ஆனால், இறையடியார் அரசனிடம், “நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரமாட்டேன். இவ்விடத்தில் உண்ண மாட்டேன்; தண்ணீர் குடிக்கவும் மாட்டேன்.
1 இராஜாக்கள் 13 : 9 (ECTA)
ஏனென்றால், ‘உணவு அருந்தக் கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று சொன்னார்.
1 இராஜாக்கள் 13 : 10 (ECTA)
அவ்வாறே அவர் பெத்தேலுக்குத் தாம் வந்த வழியாகச் செல்லாமல் வேறு வழியாகத் திரும்பிப் போனார்.
1 இராஜாக்கள் 13 : 11 (ECTA)
பெத்தேலின் முதிய இறைவாக்கினர் வயது முதிர்ந்த இறைவாக்கினர் ஒருவர் பெத்தேலில் வாழ்ந்து வந்தார். அவருடைய மைந்தர்கள் தங்கள் தந்தையிடம் வந்து இறையடியார் அன்று பெத்தேலில் செய்தவை அனைத்தையும், அரசனுக்குக் கூறியவற்றையும் அறிவித்தார்கள்.
1 இராஜாக்கள் 13 : 12 (ECTA)
அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, “அவர் எவ்வழியாகச் சென்றார்?” என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.
1 இராஜாக்கள் 13 : 13 (ECTA)
அவர் தம் மைந்தர்களிடம், “கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார்.
1 இராஜாக்கள் 13 : 14 (ECTA)
அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், “நான்தான்” என்றார்.
1 இராஜாக்கள் 13 : 15 (ECTA)
முதியவர் அவரை நோக்கி, “என்னோடு என் வீட்டிற்கு வந்து உணவருந்தும்” என்று கேட்டுக்கொண்டார்.
1 இராஜாக்கள் 13 : 16 (ECTA)
அதற்கு அவர், “நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், ‘அங்கே நீ உணவு அருந்தக் கூடாது;
1 இராஜாக்கள் 13 : 17 (ECTA)
தண்ணீர் குடிக்கக் கூடாது; போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியிருக்கிறார் என்றார்.
1 இராஜாக்கள் 13 : 18 (ECTA)
அதற்கு முதியவர், “உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். ‘உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார்” என்றார். ஆனால், அவர் சொன்னதோ பொய்.
1 இராஜாக்கள் 13 : 19 (ECTA)
ஆயினும் இறையடியார் அதை நம்பி அவரோடு திரும்பிச் சென்று அவரது வீட்டில் உணவருந்தித் தண்ணீர் குடித்தார்.
1 இராஜாக்கள் 13 : 20 (ECTA)
அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது.
1 இராஜாக்கள் 13 : 21 (ECTA)
அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில், “ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்; உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை.
1 இராஜாக்கள் 13 : 22 (ECTA)
நீ உணவு அருந்தவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டிருக்க, நீ அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து உணவு அருந்தித் தண்ணீர் குடித்ததால், உனது சடலம் உன் மூதாதையரின் கல்லறையில் வைக்கப்படமாட்டாது” என்று கூறினார்.
1 இராஜாக்கள் 13 : 23 (ECTA)
அழைத்து வரப்பட்ட இறைவாக்கினர் உண்டு குடித்த பிறகு முதியவர் அவருக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொடுத்தார்.
1 இராஜாக்கள் 13 : 24 (ECTA)
அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அடித்துக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. அதன் அருகில் கழுதை நின்று கொண்டிருந்தது. சிங்கமும் அச்சடலத்தின் அருகே நின்று கொண்டிருந்தது.
1 இராஜாக்கள் 13 : 25 (ECTA)
அவ்வழியே சென்ற ஆள்கள் வழியில் கிடந்த சடலத்தையும் அதனருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டனர். அவர்கள் முதிய இறைவாக்கினர் குடியிருந்த நகருக்கு வந்து அதைத் தெரிவித்தார்கள்.
1 இராஜாக்கள் 13 : 26 (ECTA)
தம் வழியே சென்ற இறையடியாரைத் திரும்பி வரச் செய்த இறைவாக்கினர் அதைக் கேட்டபோது, “இந்த இறையடியார் ஆண்டவரின் சொல்லை மீறியவர். எனவே, ஆண்டவர் அவருக்குச் சொல்லியிருந்தபடியே அவரைச் சிங்கத்துக்கு இரையாக்கினார். அது அவரைப் பீறிக் கொன்றுவிட்டது” என்றார்.
1 இராஜாக்கள் 13 : 27 (ECTA)
பின்னர், தம் மைந்தரை நோக்கி, “எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள்.
1 இராஜாக்கள் 13 : 28 (ECTA)
அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை; கழுதையைப் பீறிப் போடவுமில்லை.
1 இராஜாக்கள் 13 : 29 (ECTA)
அப்பொழுது அந்த முதிய இறைவாக்கினர் இறையடியாரின் சடலத்தை எடுத்துக் கழுதையின்மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும் தம் ஊருக்குக் கொண்டு வந்தார்.
1 இராஜாக்கள் 13 : 30 (ECTA)
அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள், “ஐயோ! என் சகோதரனே!” என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள்.
1 இராஜாக்கள் 13 : 31 (ECTA)
அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி, “நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள்.
1 இராஜாக்கள் 13 : 32 (ECTA)
பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும்” என்றார்.
1 இராஜாக்கள் 13 : 33 (ECTA)
எரொபவாமின் மாபெரும் பாவம் இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர்.
1 இராஜாக்கள் 13 : 34 (ECTA)
இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34