1 இராஜாக்கள் 1 : 1 (ECTA)
தாவீதின் முதுமைப் பருவம் தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.
1 இராஜாக்கள் 1 : 2 (ECTA)
எனவே, அவருடைய அலுவலர் அவரிடம், “அரசே! எம் தலைவராகிய உமக்கென ஒர் இளம் கன்னிப் பெண்ணைத் தேடப்போகிறோம். அவள் அரசராகிய உமக்குத் தாதியாக இருந்து பணிவிடை புரிவாள்; அவள் உமக்கருகில் படுத்து எம் தலைவரும் அரசருமாகிய உமது குளிரைப் போக்குவாள்” என்றனர்.
1 இராஜாக்கள் 1 : 3 (ECTA)
அவ்வாறே, அவர்கள் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று அழகிய ஓர் இளம் பெண்ணுக்காகத் தேடி அலைந்து, சூனேம் ஊரைச் சார்ந்த அபிசாகு என்பவளைக் கண்டு, அவளை அரசரிடம் அழைத்து வந்தார்கள்.
1 இராஜாக்கள் 1 : 4 (ECTA)
பேரழகியான அந்த இளம்பெண் அரசருக்குத் தாதியாயிருந்து பணிவிடை புரிந்து வந்தாள். ஆனால், அரசர் அவளோடு கூடி வாழவில்லை.
1 இராஜாக்கள் 1 : 5 (ECTA)
அதோனியா அரசுரிமை நாடல் அகித்து என்பவளிடம் பிறந்தவனான அதோனியா, “நானே அரசனாவேன்” என்று செருக்குடன் சொல்லிக் கொண்டு தனக்கெனத் தேர்ப்படையையும், குதிரைப்படையையும் தன்முன் கட்டியம் கூறிச் செல்ல ஐம்பது பேரையும் பயிற்சி செய்து வைத்திருந்தான். [* 2 சாமு 3: 4 ]
1 இராஜாக்கள் 1 : 6 (ECTA)
“நீ ஏன் இப்படிச் செய்கிறாய்” என்று அவன் தந்தை அவனை ஒருபோதும் கண்டித்ததே இல்லை. அவன் அழகு மிக்கவன்; அப்சலோமுக்குப் பின் பிறந்தவன்.
1 இராஜாக்கள் 1 : 7 (ECTA)
அவன் செரூயாவின் மகனான யோவாபுடனும் குருவாகிய அபியத்தாருடனும் கூடி ஆலோசனை செய்தான். அவர்கள் அதோனியாவுக்குத் துணை நின்றார்கள்.
1 இராஜாக்கள் 1 : 8 (ECTA)
ஆனால், குருவாகிய சாதோக்கும் யோயாதாவின் மகன் பெனாயாவும் இறைவாக்கினர் நாத்தானும் சிமயி, இரேயி என்பவர்களும் தாவீதின் மெய்க்காப்பாளர்களும் அதோனியாவின் பக்கம் சேரவில்லை.
1 இராஜாக்கள் 1 : 9 (ECTA)
அதன் பிறகு ஏன்ரோகேல் அருகேயுள்ள சோகலேத்து என்ற பாறையின் மேல் அதோனியா ஆடுகளையும் எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். அரசரின் மைந்தரான தன் உடன் பிறந்தார் அனைவரையும் அரச அலுவலரான யூதாவைச் சேர்ந்த அனைவரையும் அதற்கு அழைத்திருந்தான்.
1 இராஜாக்கள் 1 : 10 (ECTA)
ஆனால், அவன் இறைவாக்கினர் நாத்தானையோ, பெனாயாவையோ மெய்க்காப்பாளர்களையோ தன் சகோதரன் சாலமோனையோ அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 11 (ECTA)
சாலமோன் அரசராதல் இப்படியிருக்க, நாத்தான் சாலேமோனின் தாயான பத்சேபாவிடம் “அகித்தின் மகன் அதோனியா அரசனாகிவிட்டான். இது நம் தலைவர் தாவீதுக்குக் தெரியாது. நீர் இதுபற்றிக் கேள்விப்படவில்லையா? [* 2 சாமு 12: 24 ]
1 இராஜாக்கள் 1 : 12 (ECTA)
உம் உயிரையும் உம் மகன் சாலமோன் உயிரையும் காத்துக்கொள்ள, நான் உமக்கு ஆலோசனை ஒன்று கூறுகிறேன்;
1 இராஜாக்கள் 1 : 13 (ECTA)
உடனே அரசர் தாவீதைப் போய்ப் பாரும். அவரிடம் “என் தலைவரே! என் அரசே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, ‘உம் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான் என்று ஆணையிட்டுக் கூறவில்லையா? அப்படியாயின் அதோனியா அரசனாகியிருப்பது எப்படி?’ என்று கேளும்.
1 இராஜாக்கள் 1 : 14 (ECTA)
அங்கு நீர் அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில் நானும் உமக்குப்பின் வருகிறேன். வந்து நீர் பேசியவற்றை உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.
1 இராஜாக்கள் 1 : 15 (ECTA)
அவ்வாறே, பத்சேபா பள்ளியறையில் இருந்த வயது முதிர்ந்த அரசரைப் பார்க்கச் சென்றார். அங்கே சூனேமைச் சார்ந்த அபிசாகு அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.
1 இராஜாக்கள் 1 : 16 (ECTA)
பத்சேபா, அரசரைத் தாள் பணிந்து வணங்க, அரசர் “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
1 இராஜாக்கள் 1 : 17 (ECTA)
அவரோ அவரிடம், “என் தலைவரே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, ‘உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்’ என்று உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறவில்லையா?
1 இராஜாக்கள் 1 : 18 (ECTA)
ஆனால், என் தலைவராகிய அரசே! இதோ உமக்குத் தெரியாமலே அதோனியா அரசனாகி விட்டான்.
1 இராஜாக்கள் 1 : 19 (ECTA)
அவன் மிகுதியான எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் குருவாகிய அபியத்தாரையும் படைத்தலைவன் யோவாபையும் அழைத்திருக்கிறான். ஆனால், உம் அடியான் சாலமோனை மட்டும் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 20 (ECTA)
என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அரியணை ஏறுபவன் யார் என்று நீரே அறிவிக்க வேண்டுமென்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
1 இராஜாக்கள் 1 : 21 (ECTA)
அப்படி அறிவிக்காவிடில் என் தலைவராகிய அரசர் தம் மூதாதையரோடு துயில் கொள்ளும் நாளில் நானும் என் மகன் சாலமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம்” என்றார்.
1 இராஜாக்கள் 1 : 22 (ECTA)
அவர் இவ்வாறு அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில், இறைவாக்கினர் நாத்தான் உள்ளே வந்தார்.
1 இராஜாக்கள் 1 : 23 (ECTA)
அங்கே இருந்தவர்கள் அரசரிடம், “இறைவாக்கினர் நாத்தான் இங்கு வந்திருக்கிறார்” என்றார்கள். அவர் உள்ளே நுழைந்து அரசர்முன் சென்று தரைமட்டும் பணிந்து வணங்கினார்.
1 இராஜாக்கள் 1 : 24 (ECTA)
அப்பொழுது, நாத்தான், “என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அதோனியா அரசாள்வான்; அவன் உம் அரியணைமீது அமர்வான் என்று நீர் கூறினதுண்டா?
1 இராஜாக்கள் 1 : 25 (ECTA)
ஏனெனில், அதோனியா இன்று இங்கிருந்து போய் மிகுதியான எருதுகளையும், கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் படைத்தலைவராகிய யோவாபையும்* குருவாகிய அபியத்தாரையும் அதற்கு அழைத்திருக்கிறான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து ‘அரசர் அதோனியா வாழ்க!’ என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். * ‘படைத் தலைவர்கள்’ என்பது எபிரேய பாடம்..
1 இராஜாக்கள் 1 : 26 (ECTA)
ஆனால், உம் அடியானாகிய என்னையும் குரு சாதோக்கையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 27 (ECTA)
என் தலைவரும் அரசருமாகிய உமக்குப் பின் அரியணையில் யார் அமர வேண்டுமென்று அடியேனுக்கு இதுவரை நீர் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க இவையெல்லாம் என் தலைவராகிய அரசரது சொற்படி நடந்திருக்கக்கூடுமா?” என்று கேட்டார்.
1 இராஜாக்கள் 1 : 28 (ECTA)
அப்பொழுது தாவீது அரசர் மறுமொழியாக, “பத்சேபாவை என் முன்னே வரவழையுங்கள்” என்றார். அவரும் அரசரிடம் வந்து அவர் முன்னிலையில் நின்றார்.
1 இராஜாக்கள் 1 : 29 (ECTA)
அரசர், “எல்லாத் துன்பங்களினின்றும் என் உயிரைக் காத்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை!
1 இராஜாக்கள் 1 : 30 (ECTA)
‘உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் எனக்குப் பதிலாக அமர்வான்’ என்று இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்மேல் ஆணையிட்டு முன்பு நான் சொன்னதை இன்று நான் செய்து முடிப்பேன்” என்றார்.
1 இராஜாக்கள் 1 : 31 (ECTA)
அப்பொழுது பத்சேபா முகம் தரையில்படத் தாழ்ந்து அரசரை வணங்கி, “என் தலைவராகிய தாவீது அரசர் நீடூழி வாழ்க!” என்றார்.
1 இராஜாக்கள் 1 : 32 (ECTA)
தாவீது அரசர், “குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். அவ்வாறே, அவர்கள் அரசர்முன் வந்தார்கள்.
1 இராஜாக்கள் 1 : 33 (ECTA)
அரசர் அவர்களிடம், “உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
1 இராஜாக்கள் 1 : 34 (ECTA)
அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, ‘சாலமோன் அரசர் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள்.
1 இராஜாக்கள் 1 : 35 (ECTA)
அதன்பின், அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன்” என்றார்.
1 இராஜாக்கள் 1 : 36 (ECTA)
யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக “அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக!
1 இராஜாக்கள் 1 : 37 (ECTA)
ஆண்டவர் என் தலைவரான அரசருடன் இருந்தது போல் சாலமோனுடனும் இருப்பாராக! அவரது அரியணையை என் தலைவர் தாவீது அரசர் அரியணையைவிட மாண்பு மிக்கதாக ஆக்கியருள்வாராக!” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 38 (ECTA)
அவ்வாறே, குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோர் அங்கிருந்து போய், சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி, கீகோனுக்கு அழைத்துச் சென்றனர்.
1 இராஜாக்கள் 1 : 39 (ECTA)
அங்கே குரு சாதோக்கு கூடாரத்திலிருந்து எண்ணெய்க் கொம்பை எடுத்து வந்து, சாலமோனை திருப்பொழிவு செய்தார். அப்பொழுது எக்காளம் முழங்க எல்லா மக்களும் “சாலமோன் அரசர் வாழ்க!” என்றனர்.
1 இராஜாக்கள் 1 : 40 (ECTA)
எல்லா மக்களும் தாரை ஊதிக் கொண்டு மிகுந்த அக்களிப்போடும் ஆர்ப்பரிப்போடும் அவர் பின்னால் சென்றனர். அவர்கள் எழுப்பிய பேரொலியால் நிலமே நடுங்கிற்று.
1 இராஜாக்கள் 1 : 41 (ECTA)
அதோனியாவும் அவனோடிருந்த அனைத்து விருந்தினரும் உண்டு முடித்த வேளையில், இப்பேரொலி அவர்கள் காதுக்கு எட்டியது. எக்காள ஒலி காதில்விழவே யோவாபு, “நகரில் ஏன் இத்துணை ஆரவாரம்?” என்று வினவினார்.
1 இராஜாக்கள் 1 : 42 (ECTA)
அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குரு அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். அதோனியா “உள்ளே வா; நீ திறமை மிக்கவன்; நல்ல செய்தியே கொண்டு வருவாய்” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 43 (ECTA)
யோனத்தான் அதோனியாவிடம் கூறியது: “அதுதான் இல்லை; நம் தலைவராகிய அரசர் தாவீது சாலமோனை அரசராக்கி விட்டார்.
1 இராஜாக்கள் 1 : 44 (ECTA)
குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோரை அவனோடு அனுப்பி விட்டார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதைமேல் அமர்த்தினர்.
1 இராஜாக்கள் 1 : 45 (ECTA)
குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாகத் திருப்பொழிவு செய்துவிட்டனர். பிறகு, அங்கிருந்து அக்களிப்போடு அவனை அழைத்து வந்துள்ளனர். எனவேதான், நகரில் இத்துணை ஆரவாரம்!
1 இராஜாக்கள் 1 : 46 (ECTA)
நீங்கள் கேட்டது அந்த இரைச்சல்தான். சாலமோனும் இப்பொழுது அரச அரியணைமீது அமர்ந்துள்ளான்.
1 இராஜாக்கள் 1 : 47 (ECTA)
மேலும், அரசரின் அலுவலர் நம் தலைவராகிய தாவீது அரசரிடம் வந்து, ‘உம் கடவுள் உமது பெயரைவிடச் சாலமோன் பெயரைச் சிறப்புடையதாய் ஆக்குவாராக! உமது அரியணையை விட அவரது அரியணையை மாண்புடையதாய் ஆக்குவாராக!” என்று வாழ்த்தினர். அரசரும் தம் படுக்கையில் வணங்கித் தொழுது,
1 இராஜாக்கள் 1 : 48 (ECTA)
“இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! அவர் இன்று என் அரியணைமீது ஒருவனை அமர்த்தியுள்ளார்! அதை நான் கண்குளிரச் கண்டேன்!” என்றார்.
1 இராஜாக்கள் 1 : 49 (ECTA)
உடனே அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர்.
1 இராஜாக்கள் 1 : 50 (ECTA)
அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான்.
1 இராஜாக்கள் 1 : 51 (ECTA)
அப்பொழுது சாலமோனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது; “அதோனியா, சாலமோன் அரசருக்கு அஞ்சிப் பலி பீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன், அரசர் சாலமோன், ‘என் அடியானாகிய உன்னை வாளால் கொல்லமாட்டேன்’ என்று இன்றே ஆணையிட்டுக் கூறட்டும் என்று வேண்டுகிறான்.”
1 இராஜாக்கள் 1 : 52 (ECTA)
சாலமோனும், “அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால், அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும்” என்று பதிலளித்தார்.
1 இராஜாக்கள் 1 : 53 (ECTA)
எனவே, சாலமோன் அரசர் ஆளனுப்பிப் பலிபீடத்திலிருந்து அவனை இழுத்துக்கொண்டு வரச் செய்தார். அவனும் வந்து சாலமோன் அரசர்முன் வீழ்ந்து வணங்கினான். சாலமோன் அவனிடம் “நீ உன் வீட்டுக்குப் போகலாம்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53