1 கொரிந்தியர் 9 : 1 (ECTA)
திருத்தூதரின் உரிமைகளும் கடமைகளும் எனக்குத் தன்னுரிமை இல்லையா? நானும் ஒரு திருத்தூதன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?
1 கொரிந்தியர் 9 : 2 (ECTA)
நான் திருத்தூதன் என மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும் உங்களுக்கு நான் திருத்தூதன் தானே! நீங்கள் ஆண்டவரோடு கொண்டுள்ள உறவே என் திருத்தூதுப்பணிக்கு அடையாளச் சின்னமாய் அமைகிறது.
1 கொரிந்தியர் 9 : 3 (ECTA)
இது குறித்து என்னிடம் கேள்வி கேட்போருக்கு எனது விளக்கம் இதுவே;
1 கொரிந்தியர் 9 : 4 (ECTA)
உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?
1 கொரிந்தியர் 9 : 5 (ECTA)
மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?
1 கொரிந்தியர் 9 : 6 (ECTA)
பிழைப்புக்காக உழைக்காமலிருக்க எனக்கும் பர்னபாவுக்கும் மட்டுந்தான் உரிமை இல்லையா?
1 கொரிந்தியர் 9 : 7 (ECTA)
யாராவது எப்போதாவது ஊதியமின்றிப் படைவீரராகப் பணியாற்றுவாரா? திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை மேய்க்கும் ஆயர் அதன் பாலை அருந்தாதிருப்பாரா?
1 கொரிந்தியர் 9 : 8 (ECTA)
மனித வழக்கத்தை மட்டும் வைத்து நான் இதைச் சொல்லவில்லை. திருச்சட்டமும் இதையே சொல்லவில்லையா?
1 கொரிந்தியர் 9 : 9 (ECTA)
மோசேயின் சட்டத்தில், “போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே” என்று எழுதியுள்ளதே! மாடுகளைப் பற்றிய கவலையினால் கடவுள் இதைச் சொல்கிறாரா? [* இச 25:4; 1 திமொ 5: 18 ]
1 கொரிந்தியர் 9 : 10 (ECTA)
அல்லது எங்கள் பொருட்டு இதைச் சொல்கிறாரா? ஆம், இது எங்கள் பொருட்டே எழுதப்பட்டுள்ளது. ஏனெனில், தமக்குப் பங்கு கிடைக்கும் என்னும் எதிர்நோக்குடன் உழுகிறவர் உழவேண்டும்; போரடிக்கிறவரும் அதே எதிர்நோக்குடன் போரடிக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 9 : 11 (ECTA)
நாங்கள் ஆவிக்குரியவற்றை உங்களிடையே விதைத்திருப்பதால், எங்கள் உடலுக்குரிய தேவைகளை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக் கொள்வது மிகையாகாது அல்லவா? [* உரோ 15: 27 ]
1 கொரிந்தியர் 9 : 12 (ECTA)
உங்களிடம் பங்கு பெற மற்றவர்களுக்கு உரிமை இருந்தால், எங்களுக்கு அதைவிட அதிக உரிமையில்லையா? அப்படியிருந்தும்கூட, நாங்கள் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்திக்கு எத்தடையும் வராதவாறு எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறோம்.
1 கொரிந்தியர் 9 : 13 (ECTA)
கோவிலில் வேலைசெய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவுபெறுவர்; பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர். இது உங்களுக்குத் தெரியாதா? [* இச 18: 1 ]
1 கொரிந்தியர் 9 : 14 (ECTA)
அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார். [* மத் 10:10; லூக் 10: 7 ]
1 கொரிந்தியர் 9 : 15 (ECTA)
ஆனால், இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதவுமில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது. எனக்குரிய பெருமையை எவரும் அழித்துவிட முடியாது.
1 கொரிந்தியர் 9 : 16 (ECTA)
நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
1 கொரிந்தியர் 9 : 17 (ECTA)
இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.
1 கொரிந்தியர் 9 : 18 (ECTA)
அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
1 கொரிந்தியர் 9 : 19 (ECTA)
நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
1 கொரிந்தியர் 9 : 20 (ECTA)
யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.
1 கொரிந்தியர் 9 : 21 (ECTA)
திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால், நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல; ஏனெனில், நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.
1 கொரிந்தியர் 9 : 22 (ECTA)
வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரிந்தியர் 9 : 23 (ECTA)
நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
1 கொரிந்தியர் 9 : 24 (ECTA)
பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.
1 கொரிந்தியர் 9 : 25 (ECTA)
பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். * 2 திமொ 4:7..
1 கொரிந்தியர் 9 : 26 (ECTA)
நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.
1 கொரிந்தியர் 9 : 27 (ECTA)
பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்
❮
❯