1 கொரிந்தியர் 7 : 1 (ECTA)
இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.
1 கொரிந்தியர் 7 : 2 (ECTA)
எனினும் எங்கும் பரத்தைமை காணப்படுவதால் ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழ வேண்டும்; பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழ வேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 3 (ECTA)
கணவர் தம் மனைவிக்கு மண வாழ்க்கைக்குரிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும்; அதுபோல மனைவியும் தம் கணவருக்குக் கொடுக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 4 (ECTA)
மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை; கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு. அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை; மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு.
1 கொரிந்தியர் 7 : 5 (ECTA)
மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக் கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காக சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால் உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்.
1 கொரிந்தியர் 7 : 6 (ECTA)
இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை; ஆனால் உங்கள் நிலைமையைக் கருதியே இப்படிச் சொல்கிறேன்.
1 கொரிந்தியர் 7 : 7 (ECTA)
எல்லாரும் என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனினும், ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும், வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது.
1 கொரிந்தியர் 7 : 8 (ECTA)
இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே; அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.
1 கொரிந்தியர் 7 : 9 (ECTA)
எனினும் அவர்கள் தன்னடக்கமில்லாதவர்கள் என்றால் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், காமத்தீயில் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.
1 கொரிந்தியர் 7 : 10 (ECTA)
திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே; "மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது. "இது என்னுடைய கட்டளையல்ல;
1 கொரிந்தியர் 7 : 11 (ECTA)
மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது.
1 கொரிந்தியர் 7 : 12 (ECTA)
மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுவே; இதை ஆண்டவரல்ல, நானே சொல்கிறேன்; சகோதரர் ஒருவரின் மனைவி நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரரோடு வாழ உடன்பட்டால், அவர் அவரை விலக்கிவிடக் கூடாது.
1 கொரிந்தியர் 7 : 13 (ECTA)
அப்படியே, சகோதரி ஒருவரின் கணவர் நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரியோடு வாழ உடன்பட்டால், தம் கணவரை அவர் விலக்கிவிடக் கூடாது.
1 கொரிந்தியர் 7 : 14 (ECTA)
நம்பிக்கை கொள்ளாத கணவர், நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார். அப்படியே, நம்பிக்கை கொள்ளாத மனைவி, நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார். அப்படி இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தூய்மையற்றவர்களாய் இருப்பார்களே! ஆனால் அவர்கள் தூயவர்களாய் இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 7 : 15 (ECTA)
கணவன் மனைவி ஆகிய இருவருள் நம்பிக்கை கொள்ளாத ஒருவர் பிரிந்து வாழ விரும்பினால், பிரிந்து வாழட்டும். இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கை கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார்.
1 கொரிந்தியர் 7 : 16 (ECTA)
மணமான சகோதரியே, ஒருவேளை உம்மால் உம் கணவர் மீட்படையலாம். மணமான சகோதரரே, ஒருவேளை உம்மால் உம் மனைவி மீட்படையலாம். இது உங்களுக்குத் தெரியாதா?
1 கொரிந்தியர் 7 : 17 (ECTA)
எது எப்படியிருந்தாலும், ஒவ்வொருவரும் ஆண்டவர் அவரவருக்குப் பகிர்ந்தளித்த கொடையின்படியும் அவர் விடுத்த அழைப்பின்படியும் வாழட்டும். இதுவே நான் எல்லாத் திருச்சபைகளிலும் கொடுத்துவரும் கட்டளை.
1 கொரிந்தியர் 7 : 18 (ECTA)
விருத்தசேதனம் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் அந்நிலையிலேயே இருக்கட்டும். ஒருவேளை விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டாம்.
1 கொரிந்தியர் 7 : 19 (ECTA)
விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை; செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை; கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தலே பயன்தரும்.
1 கொரிந்தியர் 7 : 20 (ECTA)
ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அந்நிலையிலேயே நிலைத்திருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 21 (ECTA)
அடிமை நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றிக் கவலைப் பட வேண்டாம். எனினும், அந்நிலையிலிருந்து விடுதலை பெற முடியுமானால் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 7 : 22 (ECTA)
அடிமை நிலையில் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர் கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 23 (ECTA)
நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமையாக வேண்டாம்.
1 கொரிந்தியர் 7 : 24 (ECTA)
சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே கடவுள்முன் நிலைத்திருங்கள்.
1 கொரிந்தியர் 7 : 25 (ECTA)
இனி, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் எதுவும் என்னிடமில்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன்.
1 கொரிந்தியர் 7 : 26 (ECTA)
மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 27 (ECTA)
மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.
1 கொரிந்தியர் 7 : 28 (ECTA)
நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
1 கொரிந்தியர் 7 : 29 (ECTA)
அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 30 (ECTA)
அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 31 (ECTA)
உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது.
1 கொரிந்தியர் 7 : 32 (ECTA)
நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 33 (ECTA)
ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 34 (ECTA)
இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 35 (ECTA)
உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.
1 கொரிந்தியர் 7 : 36 (ECTA)
ஒருவர் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணுடன் தவறாக நடக்க எண்ணங்கொண்டால், வேறு வழி இல்லையென்றால் அவர் திருமணம் செய்து கொண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அது பாவமல்ல.
1 கொரிந்தியர் 7 : 37 (ECTA)
ஆனால் தம் உள்ளத்தில் உறுதியாயிருந்து எந்தக் கட்டாயத்திற்கும் உட்படாமல், தம் சொந்த விருப்பப்படி செயல்படும் ஆற்றல் கொண்ட ஒருவர் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணை அந்நிலையிலேயே வைத்திருக்கத் தம் உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தால் அவர் செய்வதில் தவறில்லை.
1 கொரிந்தியர் 7 : 38 (ECTA)
ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 39 (ECTA)
கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 40 (ECTA)
அவர் கைம்பெண்ணாகவே இருந்துவிட்டால் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதுவே என் கருத்து. நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறேன் எனக் கருதுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: