1 கொரிந்தியர் 10 : 1 (ECTA)
சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.
1 கொரிந்தியர் 10 : 2 (ECTA)
அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
1 கொரிந்தியர் 10 : 3 (ECTA)
அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.
1 கொரிந்தியர் 10 : 4 (ECTA)
அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை.
1 கொரிந்தியர் 10 : 5 (ECTA)
அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
1 கொரிந்தியர் 10 : 6 (ECTA)
அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.
1 கொரிந்தியர் 10 : 7 (ECTA)
அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள். அவர்களைக் குறித்தே, "மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்; எழுந்து மகிழ்ந்து ஆடினர்" என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.
1 கொரிந்தியர் 10 : 8 (ECTA)
அவர்களுள் சிலர் பரத்தைமையில் ஈடுபட்டனர். அதனால் ஒரேநாளில் இருபத்து மூவாயிரம் பேர் மடிந்தனர். அவர்களைப்போல் நாமும் பரத்தமையில் ஈடுபடக்கூடாது.
1 கொரிந்தியர் 10 : 9 (ECTA)
அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது.
1 கொரிந்தியர் 10 : 10 (ECTA)
அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.
1 கொரிந்தியர் 10 : 11 (ECTA)
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
1 கொரிந்தியர் 10 : 12 (ECTA)
எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.
1 கொரிந்தியர் 10 : 13 (ECTA)
உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்.
1 கொரிந்தியர் 10 : 14 (ECTA)
எனவே, என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
1 கொரிந்தியர் 10 : 15 (ECTA)
உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 10 : 16 (ECTA)
கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா!
1 கொரிந்தியர் 10 : 17 (ECTA)
அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.
1 கொரிந்தியர் 10 : 18 (ECTA)
இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப்பொருட்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?
1 கொரிந்தியர் 10 : 19 (ECTA)
எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்?
1 கொரிந்தியர் 10 : 20 (ECTA)
மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவுகொள்வதை நான் விரும்பவில்லை.
1 கொரிந்தியர் 10 : 21 (ECTA)
நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது.
1 கொரிந்தியர் 10 : 22 (ECTA)
நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?
1 கொரிந்தியர் 10 : 23 (ECTA)
"எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு "; ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல. "எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு "; ஆனால் எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல.
1 கொரிந்தியர் 10 : 24 (ECTA)
எவரும் தன்னலம் நாடக்கூடாது; மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்.
1 கொரிந்தியர் 10 : 25 (ECTA)
இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் நீங்கள் உண்ணலாம்; கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
1 கொரிந்தியர் 10 : 26 (ECTA)
ஏனெனில், "மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை."
1 கொரிந்தியர் 10 : 27 (ECTA)
நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர் உங்களை உணவருந்த அழைக்கும்போது நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால், அவர் உங்களுக்குப் பரிமாறும் எதையும் உண்ணுங்கள்; கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
1 கொரிந்தியர் 10 : 28 (ECTA)
எவராவது உங்களிடம், "இது படையல் உணவு" என்று சொன்னால் அவ்வாறு தெரிவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும் அதை உண்ண வேண்டாம்.
1 கொரிந்தியர் 10 : 29 (ECTA)
உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல, மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன். "ஏன் எனது தன்னுரிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்?"
1 கொரிந்தியர் 10 : 30 (ECTA)
"நான் நன்றியுடன் உணவருந்தினால், நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்?" என்று ஒருவர் கேட்கலாம்.
1 கொரிந்தியர் 10 : 31 (ECTA)
அதற்கு நான் சொல்வது; நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.
1 கொரிந்தியர் 10 : 32 (ECTA)
யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.
1 கொரிந்தியர் 10 : 33 (ECTA)
நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: