1 நாளாகமம் 13 : 1 (ECTA)
உடன்படிக்கைப் பேழை கிரியத் எயாரிமிலிருந்து எருசலேமுக்கு எடுத்துச் செல்லப்படல்
(2 சாமு 6:1-11) தாவீது ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களோடும் ஏனைய தலைவர் அனைவரோடும் கலந்தாலோசித்தார்.
1 நாளாகமம் 13 : 2 (ECTA)
தாவீது இஸ்ரயேல் சபை முழுவதையும் நோக்கிக் கூறியது: “உங்களுக்கு நலமெனத் தோன்றினால், அது நம் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ரயேல் நாடெங்கிலும் வாழ்ந்துவரும் நம் சகோதரர் அனைவருக்கும் அவர்களுடன் மேய்ப்பு நிலம் சூழ்ந்த நகர்களில் வாழ்ந்துவரும் குருக்களும், லேவியரும் நம்மோடு வந்து சேரும்படி ஆளனுப்புவோம்.
1 நாளாகமம் 13 : 3 (ECTA)
சவுலின் காலத்தில் நாம் நாடிச்செல்லாமல் விட்டுவிட்ட நம் கடவுளின் பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம்”.
1 நாளாகமம் 13 : 4 (ECTA)
இது அனைவருக்கும் நலமென்று தோன்றியதால் சபையோர் அனைவரும் அவ்வாறே செய்ய இசைந்தனர்.
1 நாளாகமம் 13 : 5 (ECTA)
எனவே, தாவீது கடவுளின் பேழையைக் கிரியத் எயாரிமிலிருந்து கொண்டு வரும்படி எகிப்தைச் சேர்ந்த சீகோர் முதல் ஆமாத்து எல்லைவரை வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று கூட்டினார். [* 1 சாமு 7:1- 2 ]
1 நாளாகமம் 13 : 6 (ECTA)
பின்னர், கெருபுகள் மேல் வீற்றிருக்கும் ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை யூதாவைச் சார்ந்த கிரியத் எயாரிம் என்னும் பாகாலாவிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ரயேல் அனைவரும் அவ்விடத்துக்குச் சென்றனர். [* விப 25: 22 ]
1 நாளாகமம் 13 : 7 (ECTA)
அவர்கள் கடவுளின் பேழையை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புது வண்டியின் மேல் ஏற்றினர். உசாவும் அகியோவும் வண்டியை ஓட்டிவந்தனர்.
1 நாளாகமம் 13 : 8 (ECTA)
தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்.
1 நாளாகமம் 13 : 9 (ECTA)
அவர்கள் கீதோன் களத்தில் வந்தபோது மாடுகள் இடறவே, உசா பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
1 நாளாகமம் 13 : 10 (ECTA)
நீட்டவே, ஆண்டவரின் சினம் உசாவுக்கு எதிராகக் கிளர்ந்து, அவன் தன் கையைப் பேழையை நோக்கி நீட்டினதால் அவனைச் சாகடித்தார்; அவன் அங்கேயே கடவுள் திருமுன் இறந்தான்.
1 நாளாகமம் 13 : 11 (ECTA)
ஆண்டவர் உசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது பெருந்துயருற்றார். அந்த இடத்துக்குப் ‘பேரேட்சு உசா’* என்று பெயரிட்டார். அப்பெயர் இந்நாள்வரை வழங்கி வருகிறது.
1 நாளாகமம் 13 : 12 (ECTA)
அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, “கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி?” என்று சொல்லி,
1 நாளாகமம் 13 : 13 (ECTA)
தாவீதின் நகருக்கு, தம்மிடம் பேழையைக் கொண்டுவராமல், இத்தியரான ஓபேது-ஏதோம் வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.
1 நாளாகமம் 13 : 14 (ECTA)
கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார். * 1 குறி 26:4-5..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14