சங்கீதம் 18 : 1 (TOV)
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். கர்த்தருடைய தாசனாகிய தாவீது இந்தப் பாட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருகளின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினது என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங்கீதம் 18 : 2 (TOV)
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 18 : 3 (TOV)
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
சங்கீதம் 18 : 4 (TOV)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
சங்கீதம் 18 : 5 (TOV)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டதன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
சங்கீதம் 18 : 6 (TOV)
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
சங்கீதம் 18 : 7 (TOV)
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
சங்கீதம் 18 : 8 (TOV)
அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
சங்கீதம் 18 : 9 (TOV)
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
சங்கீதம் 18 : 10 (TOV)
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.
சங்கீதம் 18 : 11 (TOV)
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; நீர் கொண்டு கறுத்த கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார்.
சங்கீதம் 18 : 12 (TOV)
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
சங்கீதம் 18 : 13 (TOV)
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
சங்கீதம் 18 : 14 (TOV)
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
சங்கீதம் 18 : 15 (TOV)
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
சங்கீதம் 18 : 16 (TOV)
உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
சங்கீதம் 18 : 17 (TOV)
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
சங்கீதம் 18 : 18 (TOV)
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
சங்கீதம் 18 : 19 (TOV)
என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால்பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
சங்கீதம் 18 : 20 (TOV)
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
சங்கீதம் 18 : 21 (TOV)
ஏனெனில் கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாய் விலகினதில்லை.
சங்கீதம் 18 : 22 (TOV)
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
சங்கீதம் 18 : 23 (TOV)
அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
சங்கீதம் 18 : 24 (TOV)
ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
சங்கீதம் 18 : 25 (TOV)
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
சங்கீதம் 18 : 26 (TOV)
புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
சங்கீதம் 18 : 27 (TOV)
தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
சங்கீதம் 18 : 28 (TOV)
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
சங்கீதம் 18 : 29 (TOV)
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
சங்கீதம் 18 : 30 (TOV)
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
சங்கீதம் 18 : 31 (TOV)
கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
சங்கீதம் 18 : 32 (TOV)
என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
சங்கீதம் 18 : 33 (TOV)
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
சங்கீதம் 18 : 34 (TOV)
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
சங்கீதம் 18 : 35 (TOV)
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
சங்கீதம் 18 : 36 (TOV)
என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
சங்கீதம் 18 : 37 (TOV)
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.
சங்கீதம் 18 : 38 (TOV)
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
சங்கீதம் 18 : 39 (TOV)
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
சங்கீதம் 18 : 40 (TOV)
நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
சங்கீதம் 18 : 41 (TOV)
அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
சங்கீதம் 18 : 42 (TOV)
நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
சங்கீதம் 18 : 43 (TOV)
ஜனங்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
சங்கீதம் 18 : 44 (TOV)
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக் குறுகுகிறார்கள்.
சங்கீதம் 18 : 45 (TOV)
அந்நியர் மனமடிந்து, தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
சங்கீதம் 18 : 46 (TOV)
கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
சங்கீதம் 18 : 47 (TOV)
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
சங்கீதம் 18 : 48 (TOV)
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
சங்கீதம் 18 : 49 (TOV)
இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
சங்கீதம் 18 : 50 (TOV)
தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
❮
❯