ஆதியாகமம் 15 : 1 (TOV)
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
ஆதியாகமம் 15 : 2 (TOV)
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
ஆதியாகமம் 15 : 3 (TOV)
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
ஆதியாகமம் 15 : 4 (TOV)
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
ஆதியாகமம் 15 : 5 (TOV)
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
ஆதியாகமம் 15 : 6 (TOV)
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
ஆதியாகமம் 15 : 7 (TOV)
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.
ஆதியாகமம் 15 : 8 (TOV)
அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
ஆதியாகமம் 15 : 9 (TOV)
அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.
ஆதியாகமம் 15 : 10 (TOV)
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
ஆதியாகமம் 15 : 11 (TOV)
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
ஆதியாகமம் 15 : 12 (TOV)
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
ஆதியாகமம் 15 : 13 (TOV)
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
ஆதியாகமம் 15 : 14 (TOV)
இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
ஆதியாகமம் 15 : 15 (TOV)
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
ஆதியாகமம் 15 : 16 (TOV)
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
ஆதியாகமம் 15 : 17 (TOV)
சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.
ஆதியாகமம் 15 : 18 (TOV)
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,
ஆதியாகமம் 15 : 19 (TOV)
கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
ஆதியாகமம் 15 : 20 (TOV)
ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
ஆதியாகமம் 15 : 21 (TOV)
எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
❮
❯