1. சகோதரர்களே! கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: உங்கள் உடலைக் கடவுளுக்கு உகந்த பரிசுத்த பலியாகவும், உயிருள்ள பலியாகவும் ஒப்புக் கொடுங்கள்.
2. இதுவே நீங்கள் செலுத்தவேண்டிய ஆன்மீக வழிபாடு. இவ்வுலகம் காட்டும் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடைவதாக. இவ்விதம் கடவுளின் திருவுளம் எது என உய்த்துணர்வீர்கள். அப்போது எது நல்லது, எது உகந்தது, எது தலை சிறந்தது என உங்களுக்கு விளங்கும்.
3. எனக்கு அளிக்கப்பட்ட அருளை முன்னிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது: உங்களில் எவனும் தன்னைக் குறித்து, மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அறிவுக் கொவ்வாத முறையில் தன்னை மதியாமல், அவனவனுக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த விசுவாசத்தின் அளவுக்கேற்றபடி தன்னை மதித்துக் கொள்ளட்டும்.
4. ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
5. அதுபோலவே பலராயிருக்கிற நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.
6. ஆயினும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு வரங்களைப் பெற்றுள்ளோம்: நாம் பெற்றது இறைவாக்கு வரமாயின், விசுவாசத்திற்கு இசைந்தவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்.
7. திருப்பணி வரமாயின், பணிபுரிய வேண்டும்;
8. போதிப்பவன் போதிப்பதிலும், ஊக்கமூட்டுபவன் ஊக்கந் தருவதிலும் ஈடுபடுக. தனக்குள்ளதைக் கொடுப்பவன் வள்ளன்மையும், தலைமையாய் உள்ளவன் அக்கறையும், இரக்கச் செயல்களில் ஈடுபடுபவன் முகமலர்ச்சியும் காட்டுக.
9. உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக. தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக் கொண்டிருங்கள்.
10. சகோதரர்க்குரிய முறையில் ஒருவர்க்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
11. ஊக்கத்தளராதிருங்கள்; ஆர்வம் தணியாதிருங்கள்: நீங்கள் ஊழியஞ் செய்வது ஆண்டவருக்கே.
12. நம்பிக்கை கொண்டவர்களாய் மகிழ்ச்சியோடு இருங்கள்; வேதனையில் மன ஊறுதியோடு இருங்கள்; செபத்தில் நிலையாய் இருங்கள்.
13. வறுமையுற்ற இறை மக்களோடு உங்களுக்குள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். விருந்தோம்பலில் கருத்தாயிருங்கள்.
14. உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி, கூறுங்கள், சபிக்க வேண்டாம்.
15. மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.
16. உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்.
17. பழிக்குப் பழி வாங்காதீர்கள். மனிதர் அனைவர் முன்னிலையிலும் நன்மதிப்பை இழக்காதபடி பார்த்துக்கொள்ளுளங்கள்.
18. கூடுமானால், உங்களால் இயன்ற அளவு எல்லாரோடும் நட்பமைதியுடன் வாழுங்கள்.
19. அன்புக்குரியவர்களே! நீங்களே பழி வாங்காதீர்கள், அதை இறைவனின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், ' பழிவாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன் என்கிறார் ஆண்டவர்' என்று எழுதியுள்ளது.
20. நீயோ ' உன் பகைவன் பசியாய் இருந்தால். அவன் பசியை ஆற்று; தாகமாய் இருந்தால் அவன் தாகத்தை தணி. ஏனெனில், இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்.'
21. தீமை உன்னை வெல்ல விடாதே, நன்மையால் தீமையை வெல்க.