1. எனவே, பரிசுத்த சகோதரர்களே, வானக அழைப்பில் பங்கு கொண்டுள்ளவர்களே, நாம் வெளிப்படையாய் அறிக்கையிடும் அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
2. இறைவனின் வீடு முழுவதையும் கண்காணிப்பதில் மோயீசன் உண்மையுள்ளவராக இருந்ததுபோல், இவரும் தம்மை ஏற்படுத்திய இறைவனுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்.
3. ஆனால், வீடு கட்டினவன் வீட்டைவிட எவ்வளவுக்கு மதிப்புப் பெறுகிறானோ, அவ்வளவுக்கு இவர் மோயீசனைவிட மகிமைக்குரியவர்.
4. ஒவ்வொரு வீட்டுக்கும் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும். உலகெல்லாம் கட்டி அமைத்தவர் கடவுளே.
5. மோயீசன் அவருடைய வீடு முழுவதையும் கண்காணிப்பதில் உண்மையுள்ளவராயிருந்தது ஊழியன் என்னும் முறையில்தான். இறைவன் அறிவித்தவற்றிற்குச் சாட்சியம் பகர்ந்ததே அவர் செய்த ஊழியம்.
6. கிறிஸ்துவோ தம் சொந்த வீட்டின்மேல் அதிகாரம் பெற்ற மகன் என்ற முறையில் உண்மையுள்ளவராய் இருந்தார். அவருடைய வீடு நாம்தாம்; ஆனால். நம்பிக்கையில் ஊன்றிய மகிமையையும் துணிவையும் உறுதியாய்ப்பற்றி நிற்கவேண்டும்.
7. எனவே, பரிசுத்த ஆவி கூறுவதுபோல், 'இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில்
8. பாலைவனத்தின்கண் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்தது போல் நீங்கள் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள்.
9. உங்கள் முன்னோர் அங்கே நாற்பது ஆண்டளவு என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10. அதனாலேயே அந்தத் தலைமுறைமீது சீற்றம் கொண்டு, 'எந்நாளும் தவறுகின்றது இவர்கள் உள்ளம். என் வழிகளையோ இவர்கள் அறியவில்லை' என்றேன்.
11. ஆகவே நான் சினங்கொண்டு 'எனது இளைப்பாற்றியை அவர்கள் அடையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டேன்."
12. சகோதரரே, உயிருள்ள கடவுளை மறுதலிக்கச் செய்யும் அவிசுவாசமான தீய உள்ளம் உங்களுள் யாருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
13. உங்களுள் எவனும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு அடங்கா உள்ளத்தினன் ஆகாதவாறு 'இன்று' எனக் குறிப்பிடும் காலம் நீடிக்கும் வரையில் நாடோறும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.
14. ஏனெனில், நாம் கிறிஸ்துவோடு பங்கு பெற்றவர்களானோம்; ஆனால் தொடக்கத்தில் நமக்கிருந்த நம்பிக்கையை இறுதிவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
15. "இன்று நீங்கள் அவர் தம் குரலைக் கேட்பீர்களாகில் கிளர்ச்சியின் போது இருந்ததுபோல் நீங்கள் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள் " என்ற பகுதியில்,
16. குரலைக் கேட்டும் 'கிளர்ச்சி' செய்தவர்கள் யார்? மோயீசனின் தலைமையில் எகிப்தினின்று வெளியேறிய மக்கள் அனைவருந்தானே?
17. 'நாற்பது ஆண்டளவு கடவுள் சீற்றம் கொண்டது' யார்மீது? பாவம் புரிந்தவர்கள் மீதன்றோ? அவர்களுடைய பிணங்களும் பாலைவனத்தில் விழுந்துகிடந்தன.
18. மீண்டும், 'எனது இளைப்பாற்றியை அடையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறியது யாருக்கு? கீழ்ப்படியாத மக்களுக்கு அன்றோ?
19. விசுவாசமின்மையால்தான் அவர்கள் அதை அடைய முடியவில்லை எனத் தெரிகிறது.