1. கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கின்ற விசுவாசிகளான எபேசு நகரத்து இறைமக்களுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான சின்னப்பன் யான் எழுதுவது:
2. நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
3. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் கிறிஸ்துவுக்குள் வானக வாழ்வுக்குரியவையும், தேவ ஆவி தருபவையுமான கொடைகள் அனைத்தும் பொழிந்து, நமக்கு ஆசி அளித்தார்.
4. எவ்வாறெனில், நாம் அவரது திருமுன் பரிசுத்தரும் மாசற்றவருமாய் இருக்குமாறு, உலகம் உருவாகு முன்னரே அவர் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார்.
5. அவர் தம் திருவுள விருப்பத்திற்கேற்ப, தம் அன்பு மகனுக்குள் நமக்கருளியஅருளின் மாட்சிமை புகழ் பெற்று விளங்க,
6. இயேசு கிறிஸ்துவின் வழியாகவே, நம்மைத் தம் பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் நம்மை முன்குறித்து வைத்தார்.
7. அந்த அன்பு மகனாலே, அவருடைய இரத்தத்தின் வழியாய், இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம் மீட்பு அடைகிறோம், குற்றங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறோம்.
8. அந்த அருளை முழுஞானமாகவும் அறிவுத்திறனாகவும், நம்மில் பெருகச் செய்தார்.
9. தம் திருவுளத்தின் மறைவான திட்டத்தை நமக்கு அறிவித்தார். கால நிறைவில் நிறைவேற்ற வேண்டிய ஏற்பாடாக முதலிலிருந்தே கிறிஸ்துவுக்குள் அத்தயவான திட்டத்தை வகுத்து வைத்திருந்தார்.
10. விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவுக்குள் ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே அத்திட்டம்.
11. தம் திருவுளக் கருத்திற்கேற்ப அனைத்தையும் செய்து முடிக்கும் இறைவனின் திட்டப்படி, முன் குறிக்கப்பட்ட நாங்கள் கிறிஸ்துவுக்குள்ளே பங்கு பெற்றுக்கொண்டோம்.
12. இவ்வாறு, கிறிஸ்துவின் மேல் முதன் முதல் நம்பிக்கை வைத்த நாங்கள் தம்முடைய மாட்சிமைக்குப் புகழ்ச்சியாய் விளங்க வேண்டுமென, இறைவன் விரும்பினார்.
13. நீங்களும், உங்கள் மீட்பின் நற்செய்தியாகிய உண்மை வார்த்தையைக் கேட்டு, விசுவாசம் கொண்டு, வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் முத்திரையைக் கிறிஸ்துவுக்குள்ளே பெற்றுக் கொண்டீர்கள்.
14. நாம் மீட்படைந்து, இறைவனது உடைமையாவதற்கென, ஆவியானவரே நம் உரிமைப் பேற்றின் அச்சாரமாய் இருக்கிறார். இவ்வாறே இறைவனுடைய மாட்சிமையின் புகழ் விளங்க வேண்டியிருந்தது.
15. ஆகவே, ஆண்டவராகிய இயேசுவில் உங்களுக்குள்ள விசுவாசத்தையும் இறைமக்களான அனைவரிடமும் நீங்கள் காட்டும் அன்பையும் கேள்வியுற்று.
16. நானும் என் செபங்களில் உங்களைக் குறிப்பிட்டு, உங்களை நினைத்து இடை விடாது நன்றி கூறுகிறேன்.
17. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமை மிக்க தந்தையுமானவர் தேவ ஆவியை உங்களுக்கு கொடுப்பாராக! அந்த ஆவியினால் நீங்கள் உண்மையை வெளிப்படுத்தும் அருளையும் ஞானத்தையும் பெற்று, அவரை முற்றும் அறிந்துகொள்வீர்களாக.
18. இறைவன் உங்களை அழைத்ததால் எத்தகைய நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், இறைமக்களிடையே அவர் உங்களுக்கு அளிக்கும் உரிமைப் பேற்றின் மாட்சிமை எவ்வளவு வளம் மிக்கது என்றும்,
19. விசுவாசிப்போரான நம் பொருட்டு அவர் விளங்கச் செய்யும் வல்லமை எத்துணை பெருமை மிக்கது என்றும் நீங்கள் அறிந்து கொள்ளும்படி உங்கள் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! நமக்காக அவர் காட்டும் இவ்வல்லமை கிறிஸ்துவில் அவர் செயற்படுத்திய அவரது வலிமை மிக்க பேராற்றல் ஆகும்.
20. இறந்தோரிடமிருந்து கிறிஸ்துவை உயிர்ப்பித்து அவரை விண்ணுலகில் தம் வலப்புறத்தில் அமரச்செய்தது இவ்வல்லமையே.
21. ஆம், தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர், வலிமை மிக்கோர், ஆட்சி புரிவோர் ஆகிய தூதர் அனைவருக்கும் மேலாகவும், இவ்வுலகில் மட்டுமன்று மறுவுலகிலும், வேறு எப்பெயர் கொண்டவருக்கும் மேலாகவும், அவரை உயர்த்தினார்.
22. அனைத்தையும் அவருக்கு அடிபணியச்செய்து, அனைத்திற்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாய் ஏற்படுத்தினார்.
23. திருச்சபையோ அவருடைய உடல், எல்லா வகையாலும் எப்பொழுதும் இறைவனால் நிறைவாக்கப்பெறும் கிறிஸ்துவின் நிறைவே அத்திருச்சபை.