Tamil சத்தியவேதம்
சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்
சங்கீதம்
சங்கீதம் அதிகாரம் 147
சங்கீதம் அதிகாரம் 147
1 கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
2 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார்.
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
சங்கீதம் அதிகாரம் 147
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
7 கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
சங்கீதம் அதிகாரம் 147
9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
12 எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
சங்கீதம் அதிகாரம் 147
13 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
சங்கீதம் அதிகாரம் 147
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.