Tamil சத்தியவேதம்
மாற்கு மொத்தம் 16 அதிகாரங்கள்
மாற்கு அதிகாரம் 2
1 சில நாட்களுக்குப்பின் அவர் கப்பர் நகூம் ஊருக்கு மீண்டும் வந்தார். வீட்டில் அவர் இருக்கிறார் என்ற செய்தி பரவிற்று.
2 பலர் வந்து கூடவே, வாசலுக்கு வெளியே முதலாய் இடமில்லை. அவர் அவர்களுக்குத் தேவ வார்த்தையை எடுத்துச் சொன்னார்.
3 அப்பொழுது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு அவரிடம் வந்தனர்.
4 கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.
மாற்கு அதிகாரம் 2
5 இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
6 அங்கிருந்த மறைநூல் அறிஞருள் சிலர். "என்ன, இவர் இப்படிப் பேசுகிறார்? கடவுளைத் தூஷிக்கிறார்.
7 கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்?" என்று உள்ளத்தில் எண்ணினர்.
8 இவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு உடனே மனத்தில் அறிந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளத்தில் இப்படி நினைப்பதேன்?
மாற்கு அதிகாரம் 2
9 எது எளிது ? இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? 'எழுந்து உன் படுக்கையை எடுத்துகொண்டு நட' என்பதா?
10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"
11 திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.
மாற்கு அதிகாரம் 2
12 என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான். இதனால் அனைவரும் திகைப்புற்று, "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதேயில்லை" என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.
13 அவர் மீண்டும் கடலோரம் சென்றார். கூட்டம் எல்லாம் அவரிடம் வரவே அவர்களுக்குப் போதிக்கலானார்.
14 அவர் வழியே போகையில் அல்பேயுவின் மகன் லேவி, சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி. "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.
மாற்கு அதிகாரம் 2
15 அவருடைய வீட்டில் இயேசு பந்தி அமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் ஒருங்கே அமர்ந்திருந்தனர். ஏனெனில், அவரைப் பின்தொடர்ந்தவர் பலர்.
16 பரிசேயரைச் சேர்ந்த மறைநூல் அறிஞர், அவர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதைக் கண்டு அவருடைய சீடரை நோக்கி, "உங்கள் போதகர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதேன்?" என்றனர்.
17 இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை. நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று அவர்களிடம் கூறினார்.
மாற்கு அதிகாரம் 2
18 ஒருநாள் அருளப்பருடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்தனர். அப்பொழுது சிலர் அவரிடம் வந்து, "அருளப்பருடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருக்க, உம்முடைய சிடர் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.
19 இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும் அவன் தோழர்கள் நோன்பு இருக்கலாமா? மணமகனுடன் இருக்குந்தனையும் அவர்கள் நோன்பு இருக்க முடியாது.
20 மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும். அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.
மாற்கு அதிகாரம் 2
21 பழைய ஆடையில் கோடித்துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. அப்படிப் போட்டால் அந்த ஒட்டு பழையதைக் கிழிக்கும்,
22 கிழியலும் பெரிதாகும். புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவரும் இல்லை. வைத்தால் இரசம் சித்தைகளைக் கிழிப்பதுமல்லாமல் இரசமும் சித்தைகளும் பாழாகும். ஆனால், புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்கவேண்டும்" என்றார்.
23 ஓய்வுநாளில் விளைச்சல்வழியே அவர் செல்லும்பொழுது சீடர் நடந்துகொண்டே கதிர்களைக் கொய்யத் தொடங்கினர்.
மாற்கு அதிகாரம் 2
24 பரிசேயரோ அவரை நோக்கி, "பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள்?" என்றனர்.
25 அதற்கு அவர், "தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உணவின்றிப் பசியாயிருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ?
26 அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்.
மாற்கு அதிகாரம் 2
27 அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக: மனிதன் இருப்பது ஓய்வுநாளுக்காக அன்று.
28 ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்றார்.