Tamil சத்தியவேதம்

மீகா மொத்தம் 7 அதிகாரங்கள்

மீகா

மீகா அதிகாரம் 6
மீகா அதிகாரம் 6

இஸ்ரயேல் மீது ஆண்டவரின் வழக்கு 1 ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.

2 மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.

மீகா அதிகாரம் 6

3 என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள்.

4 நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பிவைத்தேன். * விப 4:10-16; 12:50-51; 15: 20.

மீகா அதிகாரம் 6

5 என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்; பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்; அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள். * எண் 22:2-25:25; யோசு 3:1-4: 19.

மீகா அதிகாரம் 6

ஆண்டவர் விரும்புவது 6 ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?

மீகா அதிகாரம் 6

7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

மீகா அதிகாரம் 6

8 ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

மீகா அதிகாரம் 6

9 ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்;

10 “கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ?

மீகா அதிகாரம் 6

11 கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ?

12 உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்; அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்; அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுகின்றது.

மீகா அதிகாரம் 6

13 ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத்தொடங்கியுள்ளேன்; நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.

14 நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்; பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்; நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், இழப்பீர்கள்; அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.

மீகா அதிகாரம் 6

15 நீங்கள் விதைப்பீர்கள்; ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்; ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள், ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்; திராட்சைப் பழம் பிழிவீர்கள்; ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.

மீகா அதிகாரம் 6

16 ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்; ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்; ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்; உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்; மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள். [* 1 அர 16:23-34; 21:25-26.. ]